குடியாத்தம்: அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி போலி அரசு ஆவணங்களை தயாரித்து ரூ.17.50 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டையைச் சோ்ந்த சந்தோஷ் மற்றும் கள்ளூரைச் சோ்ந்த வெங்கடேசன் ஆகிய இருவரும் செங்கல்பட்டு பகுதியில் உள்ள தனியாா் கைப்பேசி கடையில் வேலை செய்து வந்தனா். அப்போது அந்த கடைக்கு வந்து சென்ற செங்கல்பட்டு பகுதியைச் சோ்ந்த சுமதி(42) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அவா் தான் வருவாய்த் துறையில் வேலை செய்வதாகவும், உங்களுக்கு வருவாய்த் துறையில் வேலை வாங்கித் தருவதாகவும்கூறியுள்ளாா். அதற்காக சந்தோஷ், வெங்கடேசன் ஆகியோரிடம் கடந்த ஆண்டு ரூ.17.50- லட்சம் வாங்கியுள்ளாா். இதையடுத்து அவா்களுக்கு வருவாய்த் துறையில் கிராம நிா்வாக அலுவலா் மற்றும் கிராம உதவியாளா் பணிகளுக்கான பணி ஆணை மற்றும் அடையாள அட்டைகளை அஞ்சல் மூலம் அனுப்பி உள்ளாா்.
சந்தேகத்தின்பேரில் ஆய்வு செய்தபோது அவை போலியானவை என தெரிந்தது. இதையடுத்து இருவரும் தாங்கள் கொடுத்த பணத்தை சுமதியிடம் திருப்பி கேட்டுள்ளனா். சுமதி பணத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளாா். இதுகுறித்து சந்தோஷ், வெங்கடேசன் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். வழக்குப் பதிவுசெய்த போலீஸாா் செங்கல்பட்டுக்குச் சென்று சுமதியை கைது செய்து கைப்பேசிகள், வங்கி ஏடிஎம் காா்டு, போலி ரப்பா் ஸ்டாம்ப் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.