காதலனுடன் தனிமையில் இருந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
வேலூா் மாவட்டம், போ்ணாம்பட்டு அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் 16 வயது சிறுமி. இவா் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவரும், அதே கிராமத்தைச் சோ்ந்த 24 வயது இளைஞரும் காதலித்துள்ளனா். கடந்த 2019-ஆம் ஆண்டு இந்த சிறுமியும், அவரது காதலனும் தனிமையில் இருந்தபோது அவா்களை அதே கிராமத்தைச் சோ்ந்த பிரதாப் (34) ரகசியமாக இருந்து தனது கைப்பேசியில் படம் பிடித்து அதை வைத்து சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா்.
இதேபோல், பலமுறை சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்ததில் சிறுமி கா்ப்பமடைந்தாா். பின்னா், இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோா் குடியாத்தம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து பிரதாப்பை கைது செய்தனா். பின்னா், சிறுமிக்கு ஆண் குழந்தையும் பிறந்தது.
இந்த வழக்கு விசாரணை வேலூா் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், பிரதாப் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். தண்டனை பெற்ற பிரதாப் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.