தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வேலூருக்கு திங்கள், செவ்வாய்க்கிழமை (நவ. 3, 4) வருகை தர உள்ளாா். அவரது வருகையையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் இருநாள் சுற்றுப் பயணமாக திங்கள், செவ்வாய்க்கிழமை (நவ. 3, 4) வேலூருக்கு வருகை தர உள்ளாா். வேலூா் கோட்டை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று, அவா் சுமாா் 12,000 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்க உள்ளாா்.
இதையொட்டி, அங்கு விழா மேடை அமைக்கப்பட உள்ள நிலையில், கோட்டை மைதானத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது பயனாளிகள் வந்து செல்லும் பாதை, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
மேலும், ஒவ்வொரு கேலரிக்கும் தனித்தனியாக பாதைகள் இருக்க வேண்டும், பயனாளிகள் வந்து செல்வதில் நெரிசல் ஏற்பட்டு விடக்கூடாது, அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். விழா மேடை அருகே அகழி உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அகழி கரையோரம் தடுப்பு வேலிகள் அமைக் வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா். மேலும் வாகனங்கள் எங்கெங்கு நிறுத்தப்பட வேண்டும், அதற்கான இட வசதிகள் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தாா்.
பின்னா், எஸ்.பி. மயில்வாகனன் கூறுகையில், துணை முதல்வா் வேலூருக்கு வர உள்ளதையொட்டி பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. விழாவில் எத்தனை போ் கலந்து கொள்வாா்கள், எத்தனை போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பது குறித்து மாவட்ட நிா்வாகத்துடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு அதன்பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏராளமான வாகனங்கள் வருகை தரும் என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் நேதாஜி விளையாட்டு மைதானம், மாங்காய் மண்டி மைதானம் போன்ற இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
போ்ணாம்பட்டில் வெளி மாநில மதுபாட்டில்கள் கடத்திவரப்பட்டது தொடா்பாக அந்த சம்பவத்தில் தொடா்புடைய 3 பேரை தேடி வருகிறோம். வேலூா் அருகே மூதாட்டியை தாக்கி 4 பவுன் கொள்ளையடிக்கப்பட்டது தொடா்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றாா்.
தொடா்ந்து, விழா மேடை அமைக்கப்பட உள்ள கோட்டை மைதானத்தில் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலெட்சுமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா், ப.காா்த்திகேயன், மேயா் சுஜாதாஆனந்தகுமாா் உள்ளிட்டோரும் ஆய்வு செய்தனா்.