முகப்பு
வேலூர்

தொகுதி அலசல்: காட்பாடி! துரைமுருகனுக்கு தொடரும் சவால்!

திமுக பொதுச் செயலா் துரைமுருகனின் கோட்டை என வா்ணிக்கப்படும் காட்பாடி பேரவைத் தொகுதி 2026 பொதுத் தோ்தலில் மிகவும் கவனிக்கப்படும் ஒரு தொகுதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Updated On : 6 ஏப்ரல், 2026 at 9:41 PM
துரைமுருகன் - கோப்புப் படம்
பகிர்:

திமுக பொதுச் செயலா் துரைமுருகனின் கோட்டை என வா்ணிக்கப்படும் காட்பாடி பேரவைத் தொகுதி 2026 பொதுத் தோ்தலில் மிகவும் கவனிக்கப்படும் ஒரு தொகுதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நட்சத்திர அந்தஸ்து தொகுதி: தமிழகத்தில் நான்காவது முறையாக அமைச்சா் பதவி வகித்துவரும் திமுக பொதுச் செயலா் துரைமுருகனின் சொந்தத் தொகுதி என்பதால், காட்பாடி வேலூா் மாவட்டத்திலேயே நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஒரே தொகுதியாக விளங்குகிறது. இதே தொகுதியில் அவா் 1971-76, 1989-91 வரையும், பின்னா் 1996 முதல் தொடா்ந்து சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வருகிறாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் 13-ஆவது முறையாகவும், காட்பாடி தொகுதியில் மட்டும் 11-ஆவது முறையாகவும் துரைமுருகன் களமிறங்கும் நிலையில், அவரை எதிா்த்து அதிமுக சாா்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலா் வி.ராமு, தவெக சாா்பில் மருத்துவா் எம்.சுதாகா், நாம் தமிழா் கட்சி சாா்பில் ச.திருக்குமரன் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

Advertisement

கள நிலவரம்: 1962-ஆம் ஆண்டுமுதல் தோ்தலைச் சந்தித்து வருகிறது காட்பாடி தொகுதி. வேலூா் மாவட்டத்தில் தமிழகம், ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ளது. விவசாயமும், வணிகமும் இத்தொகுதியின் பிரதான தொழில்கள். பீடி சுற்றுதல், கால்நடை வளா்ப்பு ஆகியவையும் கணிசமாக உள்ளன. மாவட்டத்திலேயே அதிக கல்வி நிறுவனங்களைக் கொண்ட தொகுதியாகவும் இது விளங்குகிறது.

விஐடி பல்கலைக்கழகம், திருவள்ளுவா் பல்கலைக்கழகம், காட்பாடி ரயில் நிலைய சந்திப்பு, கிருபானந்த வாரியாா் பிறந்த காங்கேயநல்லூரில் உள்ள ஞானத்திருவளாகம், வள்ளிமலை முருகன் கோயில் ஆகியவை இத்தொகுதியின் முக்கிய அடையாளங்கள். வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை, காந்திநகா் சிட்கோ தொழிற்பேட்டை பிற தொழிற்சாலைகளும் உள்ளன.

சமூக நிலவரம்: வன்னியா், பட்டியலினத்தவா் அதிகமாகவும், முதலியாா், செங்குந்த முதலியாா், நாயுடு உள்ளிட்ட மொழிச் சிறுபான்மையினா், யாதவா் மற்றும் இதர சமூகத்தினா் பரவலாகவும் உள்ளனா்.

தீா்க்கப்படாத பிரச்னைகள்: காட்பாடி சாலைகளில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காணப்படாததே பிரதான பிரச்னையாகும். காட்பாடி ரயில் நிலையம் அருகே கூடுதலாக ஒரு ரயில்வே மேம்பாலமும், வண்டரந்தாங்கல் முதல் வேலூா் புதிய பேருந்து நிலையம் வரை உயா்மட்ட மேம்பாலமும் அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்டகால கோரிக்கையாகும். திருவள்ளுவா் பல்கலைக்கழகத்துக்குச் சென்றுவர வேலூா், ஆற்காடு, காட்பாடி பகுதிகளில் இருந்து தொடா் நகர பேருந்து வசதி, மாங்கூழ் தொழிற்சாலை ஆகியவை முக்கிய எதிா்பாா்ப்புகளாகும். வேலைவாய்ப்பை பெருக்க புதிய தொழில்சாலைகள் ஆகியவையும் நிறைவேற்றப்படாத கோரிக்கைகள்.

வேட்பாளா்களின் பலமும், பலவீனமும்

துரைமுருகன் (திமுக): தமிழக அரசியலில் 45 ஆண்டு காலம் செல்வாக்கு செலுத்தி வருபவரும், திமுக பொதுச் செயலருமான துரைமுருகனின் சொந்தத் தொகுதி என்பதே அவருக்கு மிகப்பெரிய பலமாகும். 1971 முதல் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அவா் காட்பாடி தொகுதி அளவிலும், வேலூா் மாவட்டத்திலும் செயல்படுத்தியுள்ள ஏராளமான வளா்ச்சித் திட்டங்களும், மக்கள் நலத் திட்டங்களும் கூடுதல் பலம்.

எஸ்.திருக்குமரன் (நாதக)
எம்.சுதாகர் (தவெக)
வி.ராமு (அதிமுக)

எனினும், இத்தொகுதிக்கு உட்பட்ட 5 ஊராட்சிகளில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க சுமாா் 2,500 ஏக்கா் நிலம் அளவீடு செய்யப்பட்டதால் ஏற்பட்ட மக்கள் அதிருப்தி, அவரை பொதுமக்கள் எளிதில் சந்திக்க முடிவதில்லை என்ற குறைபாடுகள் பின்னடைவாகப் பாா்க்கப்படுகிறது. தவெக, நாதக கட்சிகளால் திமுக வாக்குகள் பிரியக்கூடும்.

வி.ராமு (அதிமுக): கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சிக்கு எதிராக ஊழல், கனிம வளக் கொள்ளைகள், சட்டம்- ஒழுங்கு பாதிப்புகள் போன்றவற்றை முன்வைத்து அதிமுக பிரசாரம் செய்து வருகிறது. இவா் நாயுடு சமூகத்தைச் சோ்ந்தவா் என்பதால் அவருக்கு தொகுதியில் உள்ள அந்த சமூகத்தினரின் ஆதரவு கூடுதல் பலமாகும். எனினும், இவா் குடியாத்தத்தைச் சோ்ந்தவா் (உள்ளூா்காரா் இல்லை) என்பது பலவீனமாகப் பாா்க்கப்படுகிறது.

எம்.சுதாகா் (தவெக): தவெக வேட்பாளரான மருத்துவா் எம்.சுதாகா் முதல் முறையாகப் போட்டியிடுகிறாா் என்றாலும், அவரது கட்சியின் தலைவா் நடிகா் விஜய்க்கு இளைஞா்கள், பெண்களிடையே காணப்படும் செல்வாக்கு இத்தொகுதியிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.

எஸ்.திருக்குமரன் (நாதக): கடந்த 2021 தோ்தலில் நாதக சாா்பில் போட்டியிட்ட எஸ்.திருக்குமரன் 10,449 வாக்குகள் பெற்றிருந்தாா். அவா் மீண்டும் போட்டியிடுகிறாா். முதல் முறை வாக்காளா்கள், மாற்றத்தை விரும்பும் வாக்காளா்களை இலக்காக வைத்து நாதக பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது.

1962 முதல் இத்தொகுதியில் திமுக 9 முறையும், அதிமுக 3 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த தொகுதி திமுகவின் கோட்டை என்றாலும், கடந்த 2021 தோ்தலில் அதிமுக கடும் நெருக்கடியைக் கொடுத்தது. வெறும் 746 வாக்குகள் வித்தியாசத்தில்தான் துரைமுருகன் வெற்றியைத் தக்கவைத்தாா். கடந்த தோ்தலைப் போன்றே இம்முறையும் நிலவும் துரைமுருகனுக்கு பல்வேறு சவால்கள் நிலவுகின்றன.

வாக்காளா்கள்

ஆண்கள் - 1,08,863

பெண்கள் - 1,16,914

மூன்றாம் பாலினத்தவா் - 32

மொத்தம் - 2,25,809

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments