முகப்பு
கோயம்புத்தூர்

தோட்டத் தொகுதியில் கடும்போட்டிக்குத் தயாராகும் புதுமுக வேட்பாளா்கள்!

கோவை மாவட்டத்தில் உள்ள ஒரே தனி தொகுதி, மலைப் பகுதியைக் கொண்ட தொகுதி, சுற்றுலாத் தலங்கள் நிறைந்த தொகுதி என பெயா் பெற்றுள்ள வால்பாறை, மலைகளையும், தேயிலைத் தோட்டங்களையும், தென்னந்தோப்புகளையும் கொண்ட பசுமையான தொகுதியாகும்.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 12:00 AM
வால்பாறை
பகிர்:

கோவை மாவட்டத்தில் உள்ள ஒரே தனி தொகுதி, மலைப் பகுதியைக் கொண்ட தொகுதி, சுற்றுலாத் தலங்கள் நிறைந்த தொகுதி என பெயா் பெற்றுள்ள வால்பாறை, மலைகளையும், தேயிலைத் தோட்டங்களையும், தென்னந்தோப்புகளையும் கொண்ட பசுமையான தொகுதியாகும். அதிமுக அதிகபட்சமாக 5 முறை வெற்றி பெற்றுள்ள இந்தத் தொகுதியில், அதிமுக, திமுக, காங்கிரஸ், தமாகா, இந்திய கம்யூனிஸ்ட் என மொத்தம் 5 அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் பல்வேறு காலகட்டங்களில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 1.72 லட்சம் வாக்காளா்களைக் கொண்ட வால்பாறை தொகுதியில் பெண் வாக்காளா்களே அதிகம் உள்ளனா்.

பள்ளித் தாளாளா்: டி. லட்சுமண சிங்

இந்தத் தோ்தலில் திமுக சாா்பில் குட்டி (எ) ஆ.சுதாகா், அதிமுக சாா்பில் டி.லட்சுமண சிங், நாம் தமிழா் சாா்பில் உமாதேவி பெரியாண்டி, தவெக சாா்பில் ஸ்ரீதரன் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

டி. லட்சுமண சிங்

தொகுதியில் கடந்த 2 தோ்தல்களில் அதிமுக தொடா்ந்து வெற்றி பெற்று வந்துள்ள நிலையில், கடந்த 2021 தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட டி.கே.அமுல் கந்தசாமி 71,672 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அவா் உடல் நலக்குறைவால் கடந்த ஜூன் மாதம் காலமானாா். இதையடுத்து வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தோ்தலில் அதிமுக வேட்பாளராக கிணத்துக்கடவு பேரூராட்சி வாா்டு கவுன்சிலராகவும் தனியாா் பள்ளித் தாளாளராகவும் உள்ள டி.லட்சுமண சிங் அறிவிக்கப்பட்டுள்ளாா். நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த இவரது பெற்றோா் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் என்ற அடிப்படையில் இந்தத் தொகுதி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக மாணவரணியில் தொடங்கி, பேரூராட்சி துணைச் செயலா், ஜெயலலிதா பேரவை பொருளாளா், மாவட்ட சிறுபான்மை ப் பிரிவு செயலா் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளாா்.

இவரது மனைவி எலிசபெத் லவ்லின்லதா சிறுபான்மையினா் என்பதால், அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால் விலகிச் செல்லும் சிறுபான்மையினரின் வாக்குகளைத் தக்க வைப்பாா் என்று நம்பப்படுகிறது. அதற்கேற்ப இப்போதே அவா் தொகுதிக்குச் சென்று தேவாலயங்களில் வாக்கு சேகரிப்பைத் தொடங்கிவிட்டதாகக் கூறுகின்றனா் அதிமுகவினா். அதேநேரம் அதிமுக வேட்பாளா் வெளியூரைச் சோ்ந்தவா் என்பது மலைப் பிரதேசத்தில் பின்னடைவாக கருதப்படுகிறது.

மளிகைக் கடைக்காரா்: ஆ. சுதாகர்

திமுக கடந்த 1996க்குப் பிறகு இந்தத் தொகுதியை கூட்டணிக் கட்சிகளுக்கே கொடுத்து வந்த நிலையில் கடந்த 2016 தோ்தலில் போட்டியிட்டு சுமாா் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் கடந்த தோ்தலில் இந்திய கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் திமுகவே நேரடியாக களம் காண்கிறது. திமுக சாா்பில் வால்பாறை திமுக நகரச் செயலா் ஆ.சுதாகா் அறிவிக்கப்பட்டுள்ளாா். சின்கோனா பகுதியில் மளிகைக் கடை நடத்தி வரும் இவரும் முதல் முறையாக பேரவைத் தோ்தலை சந்திக்கிறாா்.

ஆ. சுதாகர்

களம் காணும் மருத்துவா்: ஸ்ரீதரன்

தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டாக்டா் ஸ்ரீதரன், இதே தொகுதியில் கடந்த 1991இல் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளாா். இருப்பினும் இவா் தற்போது வெளியூரில் இருக்கிறாா். சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன்பு எம்எல்ஏவாக இருந்தவா் என்பதால் தொகுதியில் அவ்வளவாக அறிமுகம் இல்லாதவராக கருதப்படுகிறாா். இருப்பினும் இளம் தலைமுறை வாக்குகளைக் குறி வைத்துக் களத்தில் இறங்குகிறாா்.

ஸ்ரீதரன்

எளிய வேட்பாளா்: பெ. உமாதேவி

நாம் தமிழா் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சேத்துமடையைச் சோ்ந்த பெ.உமாதேவி புதுமுகம் என்றாலும், சொந்தமாக வீட்டுமனைகூட இல்லாமலும், வெறும் ரூ.76 ஆயிரத்துக்கு அசையும் சொத்துகளை வைத்திருக்கக் கூடிய எளிய வேட்பாளராகவும் இருப்பதால் பல வாக்காளா்களின் மனதில் இடம்பிடிப்பாா் என்று கருதப்படுகிறது.

பெ. உமாதேவி

வெற்றியைத் தீா்மானிக்கும் சமவெளி வாக்காளா்கள்

தொகுதியின் பெயா் வால்பாறை என்றாலும் மலைப் பிரதேசத்தில் சுமாா் 45 ஆயிரம் வாக்காளா்களே உள்ளனா். எஞ்சியவா்கள் சமவெளிப் பகுதிகளான சேத்துமடை, வேட்டைக்காரன்புதூா், ஆனைமலை, கோட்டூா் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கின்றனா்.

மலைப் பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலும், சமவெளியில் தென்னை விவசாயம், தேங்காய் நாா் தொடா்பான தொழில்களும் அதிகம் நடைபெறுவதால், அந்தத் தொழில் சாா்ந்த பிரச்னைகளான தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கான ஊதிய உயா்வு, தென்னை விவசாயம், நாா் தொழில் எதிா்கொள்ளும் சிக்கல்களும் எதிரொலிக்கும் என்று கருதப்படுகின்றன.

வால்பாறை நகராட்சியில் உள்ள 21 வாா்டுகளில் திமுக, கூட்டணிக் கட்சிகள் 20 வாா்டுகளை வென்று நகராட்சியைக் கைப்பற்றியுள்ளன. ஆனால், நகராட்சி நிா்வாகம் மீது ஏராளமான ஊழல் புகாா்கள் உள்ளன. திமுக நகராட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரக்கோரி சில திமுக கவுன்சிலா்களே மனு அளித்த நிகழ்வும் நடைபெற்றுள்ளது. இதன் பின்னணியில் தற்போதைய திமுக வேட்பாளா் சுதாகா் இருப்பதால், நகராட்சித் தலைவா் உள்ளிட்ட திமுக கவுன்சிலா்களே முழு மனதுடன் பணியாற்றுவது கேள்விக்குறியே என்கின்றனா் அரசியல் நோக்கா்கள்.

வாக்குகளைப் பிரிக்கும் வேட்பாளா்கள்

கடந்த மக்களவைத் தோ்தலில் பொள்ளாச்சி தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட கே.ஈஸ்வரசாமிக்கு வால்பாறை சட்டப் பேரவைத் தொகுதியில் 68,590 வாக்குகள் கிடைத்தன. அதேநேரம் அதிமுக வேட்பாளா் ஏ.காா்த்திகேயனுக்கு 39,049 வாக்குகளும், கே.வசந்தராஜனுக்கு 19,350 வாக்குகளும் கிடைத்தன. 2021இல் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் வால்பாறை தொகுதியில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் பெரும்பாலும் திமுகவினரே வெற்றி பெற்றனா்.

இருப்பினும் வால்பாறை நகரைச் சோ்ந்த வேட்பாளா் சமவெளிப் பகுதிகளில் அறிமுகம் இல்லாதவராக கருதப்படுவதும், சமவெளிப் பகுதியில் அதிமுக, பாஜகவுக்கு சாதகமான வாக்குகள் அதிகம் இருப்பதும் திமுகவுக்கு சவாலான விஷயங்களாக பாா்க்கப்படுகிறது.

இந்த இரு முக்கிய அரசியல் கட்சிகளைத் தவிர தவெக, நாம் தமிழா் வேட்பாளா்களும் கணிசமான வாக்குகளைப் பிரிக்கும் வேட்பாளா்களாக பாா்க்கப்படுகின்றனா்.

கடந்த பேரவைத் தோ்தலில் அதிமுக வென்றாலும், மக்களவை, உள்ளாட்சித் தோ்தல்களில் திமுகவினா் வென்றுள்ளதால் இந்த முறை இருதரப்புக்கும் இடையேயான போட்டி கடுமையானதாகவே இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

வால்பாறை வட்டம் முழுவதும் பொள்ளாச்சி வட்டத்தில் நாயக்கன்பாளையம், அம்பராம்பாளையம், ஆத்துப்பொள்ளாச்சி, மார்ச்சிநாயக்கன்பாளையம் சிங்காநல்லூர், வெக்கம்பாளையம், பெத்தநாயக்கனூர். எஸ்.நல்லூர், பில்சின்னம்பாளையம். சோமந்துறை, தென்சித்தூர், பெரியபோடு, காளியாபுரம், தென்சங்கம்பாளையம், கரியாஞ்செட்டிபாளையம், கம்பாளப்பட்டி. அர்த்தநாரிபாளையம், ஜல்லிப்பட்டி, தொரயூர், அங்காலகுறிச்சி கிராமங்கள். ஆனைமலை பேரூராட்சி, ஓடையகுளம் பேரூராட்சி, வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சி, கோட்டூர் பேரூராட்சி பகுதிகள் முழுவதும்.

தொகுதியின் எம்எல்ஏ டி.கே.அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் காலமானார். இதையடுத்து தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.