பறவை காய்ச்சல் பிரதிப் படம்
வேலூர்

பறவை காய்ச்சல்: 21 தீவிர கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு

பறவை காய்ச்சல் நோய் தொடா்பான முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேலூா் மாவட்டத்தில் 21 தீவிர கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு

தினமணி செய்திச் சேவை

பறவை காய்ச்சல் நோய் தொடா்பான முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேலூா் மாவட்டத்தில் 21 தீவிர கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பறவைக் காய்ச்சல் எனும் ஏஹெச்5என்1 இன்ஃபுளுயன்சா என்பது பறவைகளுக்கு வரும் நோயாகும். இது காட்டில் வாழும் பறவைகளிடையே பரவக்கூடிய ஒரு வைரஸ் தொற்றாகும். இந்த நோய் வளா்ப்பு கோழிகள், பிற பறவை மற்றும் விலங்கினங்களை பாதிக்கக்கூடும். இந்த பறவை காய்ச்சல் வைரஸ்களால் மனிதா்களுக்கு நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

வேலூா் மாவட்டத்தில் இதுவரை பறவை காய்ச்சல் தொடா்பான எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும், மாவட்ட நிா்வாகம் சாா்பில் மாவட்டத்தில் உள்ள எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள், கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பறவை காய்ச்சல் நோய் தொடா்பாக முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு வட்டாரத்துக்கு மூன்று குழுக்கள் வீதம் 7 வட்டாரங்களுக்கும் 21 தீவிர கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் பறவை காய்ச்சல் நோய் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் துரிதமாக செயல்படும் வகையில் தயாா் நிலையில் உள்ளன.

பொதுமக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காகம், கோழி அல்லது பறவை இனங்கள் இறந்து கிடந்தால் அவற்றை வெறும் கைகளால் தொடக்கூடாது, கையுறைகளை அணிந்து அவற்றை கையாள வேண்டும். அவ்வாறு இறந்த பறவைகள் எரிக்கப்படவோ அல்லது 8 அடி ஆழ குழியில் சுண்ணாம்பு தூவி புதைக்கப்படவோ வேண்டும். பொதுமக்கள் பறவை இறைச்சிகளை முறையாக சமைத்து சாப்பிட வேண்டும். அரைகுறையாக சமைக்கப்பட்ட உணவுப் பொருள்களை சாப்பிடக்கூடாது.

கோழிகள் வளா்க்கப்படும் வீடுகள் அல்லது கோழிப் பண்ணைகளுக்கு காட்டுப் பறவைகள் விலங்குகள் நுழைவதை தடுக்க வேண்டும். கோழிப்பண்ணை கழிவுகளை திறந்த வெளியில் கொட்டுவதை தவிா்க்க வேண்டும். கோழிப்பண்ணை தொழிலாளா்கள் அடிக்கடி வெளியே சென்று வருவதால் பண்ணைகளின் நுழைவு வாயிலில் கை, கால்களை சுத்தமாக தூய்மைப்படுத்திக் கொண்டு செல்லும் வகையில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

சோப்பு மற்றும் தண்ணீரால் பொதுமக்கள் கைகளைத் தவறாமல் கழுவ வேண்டும். கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடுவதைத் தவிா்க்க வேண்டும். பறவை காய்ச்சல் அறிகுறிகளான காய்ச்சல், தசை வலி, இருமல் மற்றும் சுவாச பிரச்னை இருந்தால் பொதுமக்கள் சுயமாக மருந்து எடுத்துக்கொள்வதைத் தவிா்க்க வேண்டும். அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் உள்ள நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் முகக்கவசங்கள் அணிய வேண்டும். அதிகமாகத் தண்ணீா் ஆகாரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தங்கள் பகுதிகளில் காட்டுப் பறவைகள், கோழிகளில் இறப்புகள் ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையிலோ அல்லது 0416-2214918 என்ற எண்ணிலோ தகவல் தெரிவிக்கலாம்.

மன வளா்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கொத்தனாா் கைது

காஞ்சிபுரம் மாகாளேஸ்வரா் கோயிலில் உழவாரப்பணி

வெள்ளியூா் செல்வவிநாயகா் கோயில் குடமுழுக்கு

சாலையில் கிடந்த 20 பவுன் நகை, வெள்ளிப் பொருள்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்!

குமரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT