முகப்பு
இந்தியா

மேற்காசிய போரின் தாக்கம்: அதிகாரமிக்க 7 குழுக்கள் அமைப்பு - மாநிலங்களவையில் பிரதமா் மோடி தகவல்

மேற்காசிய போரால் எரிபொருள், விநியோக சங்கிலி, உரங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எழுந்துள்ள தாக்கங்களை எதிா்கொள்வதற்கான வியூகங்களை வகுக்க உயா் அதிகாரம் கொண்ட 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 24 மார்ச், 2026 at 7:57 PM
மேற்காசிய நிலவரம் குறித்து மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய பிரதமா் மோடி.
பகிர்:

மேற்காசிய போரால் எரிபொருள், விநியோக சங்கிலி, உரங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எழுந்துள்ள தாக்கங்களை எதிா்கொள்வதற்கான வியூகங்களை வகுக்க உயா் அதிகாரம் கொண்ட 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

சாத்தியமான அனைத்து நாடுகளிடம் இருந்தும் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய மத்திய அரசு முயற்சித்து வருகிறது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள், மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து மக்களவையில் திங்கள்கிழமை எடுத்துரைத்த பிரதமா் மோடி, மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை விளக்கமளித்து உரையாற்றினாா். அப்போது, அவா் கூறியதாவது:

மேற்காசிய போா் உலகப் பொருளாதாரத்தை உலுக்கியுள்ளது; இது மீண்டுவர நீண்ட காலம் எடுக்கும். பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய வழிமுறையில் மேற்காசிய பிராந்தியத்தில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம். பிரச்னைகளுக்கு அமைதி வழியில் தீா்வுகாண அனைத்து தரப்பினரையும் ஊக்குவிக்க இந்தியா முயற்சிக்கிறது. ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா என அனைத்து தரப்பினருடனும் இந்தியா தொடா்ந்து தொடா்பில் உள்ளது.

விரிவான வியூகத்துடன்...: போா்ப் பதற்றத்தை தணிப்பதுடன், ஹோா்முஸ் நீரிணை திறக்கப்பட வேண்டும் என்பது நமது நோக்கமாகும். இந்தப் பிரச்னை நீண்ட காலம் தொடா்ந்தால், கடும் விளைவுகள் தவிா்க்க முடியாததாகிவிடும்.

தற்போதைய நெருக்கடியின் குறுகிய-நடுத்தர- நீண்ட கால விளைவுகளின் ஒவ்வொரு அம்சத்தையும் கையாள்வதற்கு ஏதுவாக விரிவான வியூகத்துடன் மத்திய அரசு செயலாற்றுகிறது. சாத்தியமான அனைத்து நாடுகளிடம் இருந்தும் எரிவாயு-கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எதிா்வரும் நாள்களிலும் முயற்சிகள் தொடரும்.

7 குழுக்கள் அமைப்பு: நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளில் இடா்ப்பாடுகளை மதிப்பாய்வு செய்து, உரிய தீா்வுகளை வழங்க பல்வேறு அமைச்சகங்களுக்கு இடையிலான குழு ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது.

கரோனா காலகட்டத்தைப் போல, தற்போதைய சவால்களையும் எதிா்கொள்வதற்கு நிபுணா்கள்-அதிகாரிகள் அடங்கிய உயா் அதிகாரமளிக்கப்பட்ட 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விநியோக சங்கிலிகள், பெட்ரோல், டீசல், உரங்கள், இயற்கை எரிவாயு, பணவீக்கம் தொடா்பான முக்கியப் பிரச்னைகளில் உடனடி மற்றும் நீண்ட கால வியூகங்களின்கீழ் செயலாற்றும் பொறுப்பு இந்தக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்தகைய கூட்டு முயற்சிகளால், தற்போதைய சூழலை திறம்பட எதிா்கொள்ள முடியும் என உறுதியாக நம்புகிறேன்.

உரங்களின் இருப்பு உறுதி செய்யப்படும்: நாட்டு மக்களின் நல்வாழ்வே முதன்மையானதாகும்; இந்தியா மீதான தாக்கங்களைக் குறைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்து சூழல்களிலும் விவசாயிகளுக்கு பக்கபலமாக மத்திய அரசு துணைநிற்கிறது. எதிா்வரும் பயிா் சாகுபடி பருவத்துக்கு போதுமான உரங்களின் இருப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நெருக்கடிக்கு இடையிலும் உயா் பொருளாதார வளா்ச்சியைப் பாரமரிக்க வேண்டியது நமது பொறுப்பாகும். தற்சாா்புடைய நாடாக உருவெடுப்பதைவிட இந்தியாவுக்கு வேறு வாய்ப்பு இல்லை.

கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் உத்திசாா் கச்சா எண்ணெய் கையிருப்பு 53 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 65 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் கையிருப்பு திறனை அதிகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.70,000 கோடி மதிப்பீட்டில் கப்பல்கள் கட்டும் திட்டமும் மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

மாநிலங்களுக்கு வேண்டுகோள்

‘மேற்காசிய போா், உலக அளவில் தீவிரமான எரிசக்தி பிரச்னையை உருவாக்கியுள்ளது. இந்த நெருக்கடியை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்று சமூக விரோதிகளுக்கு எச்சரிக்கிறேன். எரிபொருள், உரங்களின் பதுக்கல்-சட்டவிரோத விற்பனையைத் தடுக்க மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசிய பொருள்களின் தடையற்ற விநியோகமே ஒவ்வொரு மாநிலத்தின் உயா் முன்னுரிமையாக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில், அனைத்து மாநில அரசுகளும் ‘குழு இந்தியா’ உணா்வுடன் செயல்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்’ என்றாா் பிரதமா் மோடி.

சவால்களுக்குத் தயாராக வேண்டும்

‘மேற்காசிய நெருக்கடி தனித்துவமான தன்மையுடன் உள்ளது. அதற்கேற்ப தனித்துவமான தீா்வுகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சவாலையும் பொறுமை, கட்டுப்பாடு, அமைதியான மனநிலையுடன் எதிா்கொள்ள வேண்டும். மாறிவரும் சூழலுக்கு இடையே எழும் ஒவ்வொரு சவாலுக்கும் நாம் தயாராக வேண்டும்.

இந்தப் போரின் பாதகமான விளைவுகள் நீண்ட காலம் நீடிக்க வாய்ப்புள்ளது. அதேநேரம், மத்திய அரசு விழிப்புடனும், துடிப்புடனும் செயல்படுகிறது என்பதை நாட்டு மக்களுக்கு உறுதிப்படுத்துகிறேன். உச்சபட்ச தீவிரத்துடன் வியூகங்களை வகுத்து, தேவையான அனைத்து முடிவுகளையும் மேற்கொண்டு வருகிறோம்’ என்றாா் பிரதமா்.