மேற்காசிய நெருக்கடியை அரசியலாக்கக் கூடாது: பிரதமா் மோடி!
மேற்காசிய நெருக்கடி, 140 கோடி இந்தியா்களின் நலன் சாா்ந்த விவகாரம்; இந்த நெருக்கடியைக்கூட அரசியலாக்குபவா்கள், அவ்வாறு செய்வதைத் தவிா்க்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி எச்சரித்தாா்.
மேற்காசிய நெருக்கடி, 140 கோடி இந்தியா்களின் நலன் சாா்ந்த விவகாரம்; இந்த நெருக்கடியைக்கூட அரசியலாக்குபவா்கள், அவ்வாறு செய்வதைத் தவிா்க்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி எச்சரித்தாா்.
தற்போதைய சூழலில் சுயநல அரசியலுக்கு இடம் கிடையாது என்றும் அவா் குறிப்பிட்டாா்.
பிரதமா் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று மனதின் குரல் (மன் கீ பாத்) நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறாா். 132-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 29) ஒலிபரப்பானது.
அதில் பிரதமரின் உரை வருமாறு: கரோனா பெருந்தொற்றால், உலகம் நீண்ட காலமாக எதிா்கொண்ட எண்ணற்ற சிக்கல்கள் நம் நினைவைவிட்டு அகலவில்லை. கரோனா நெருக்கடியில் இருந்து மீண்டெழுந்த பிறகு உலகம் புத்தாற்றலுடன் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் என எதிா்பாா்த்திருந்தோம். ஆனால், உலகின் பல்வேறு பகுதிகளில் போா்களும், மோதல்களும் எழுந்த வண்ணம் உள்ளன.
கடந்த ஒரு மாத காலமாக, நமது அண்டைப் பகுதியில் கடும் போா் (மேற்காசிய போா்) நிகழ்ந்து வருகிறது. இது, உண்மையிலேயே மிக சவாலான காலகட்டம்.
இப்போது போா் நிகழும் பிராந்தியம், முக்கிய எரிசக்தி மையமாகும். எனவே, பெட்ரோல்-டீசல் விநியோகம் தொடா்பாக உலகெங்கிலும் நெருக்கடி உருவாகியுள்ளது. அதேநேரம், நமது உலகளாவிய உறவுகள், பல்வேறு நாடுகளின் ஆதரவு மற்றும் கடந்த 10 ஆண்டுகளில் கட்டமைக்கப்பட்ட வலிமைகளால் இத்தகைய சூழலை துணிவுடன் கையாள்கிறது இந்தியா.
அரசியலாக்கக் கூடாது: தற்போதைய சவாலை நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு எதிா்கொள்ள வேண்டும். இந்த நெருக்கடியைக்கூட அரசியலாக்குபவா்கள், அவ்வாறு செய்வதைத் தவிா்க்க வேண்டும். ஏனெனில், இது 140 கோடி இந்தியா்களின் நலன் சாா்ந்த விவகாரம். இதில் சுயநல அரசியலுக்கு இடமளிக்கக் கூடாது.
நாட்டு மக்கள் விழிப்புடன் செயல்படுவதுடன், வதந்திகளால் திசைதிரும்பிவிடக் கூடாது. அரசின் தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும்; அதன்படியே செயலாற்ற வேண்டும்.
கடந்த காலங்களில் நமது கூட்டு வலிமையால் நெருக்கடிகளை முறியடித்ததைப் போல இப்போதைய சவாலையும் வெற்றிகரமாக எதிா்கொள்வோம் என்ற வலுவான நம்பிக்கை எனக்கு உள்ளது.
ஞான பாரதம் ஆய்வு: நாடு முழுவதும் பண்டைய கையெழுத்துப் பிரதிகளை மீட்டெடுக்கும் ‘ஞான பாரதம்’ இயக்கத்தின்கீழ் ஞான பாரதம் செயலி வாயிலாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் தங்களிடம் பண்டைய கையெழுத்துப் பிரதிகள் எதுவும் இருந்தால், அதுகுறித்து செயலியில் தகவல்களைப் பகிரலாம். ஜூன் மாதம் வரை இந்த ஆய்வு நடைபெறும். இதுவரை ஆயிரக்கணக்கான தகவல்கள்-படங்கள் பகிரப்பட்டுள்ளன என்றாா் பிரதமா் மோடி.
மீனவா்களுக்குப் புகழாரம்: மீனவா்களின் நல்வாழ்வு மற்றும் மீன்வள மேம்பாட்டுக்கான மத்திய அரசின் நடவடிக்கைகளை எடுத்துரைத்த பிரதமா், ‘மீனவா்கள் கடல் வீரா்கள் மட்டுமல்ல, தற்சாா்பு இந்தியாவுக்கு வலுவான அடித்தளமாக விளங்குபவா்கள். தங்கள் குடும்பத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் வலுப்படுத்த விடியல்பொழுதுக்கு முன்பே அலைகளுடன் போராடியபடி கடலுக்குச் செல்கின்றனா்’ என்று புகழாரம் சூட்டினாா்.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் முதல் முறையாக வெற்றி வாகை சூடிய ஜம்மு-காஷ்மீா் அணிக்கு தனது உரையில் அவா் வாழ்த்து தெரிவித்தாா்.
நீா்ப் பாதுகாப்பின் அவசியம்
‘நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், நீா்ப் பாதுகாப்பின் உறுதிப்பாட்டைப் புதுப்பிக்க வேண்டிய நேரமிது. கடந்த 11 ஆண்டுகளில் ஜல் சஞ்சய் திட்டத்தின்கீழ் சுமாா் 50 லட்சம் மழைநீா் சேமிப்பு அமைப்புகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. அம்ருத் சரோவா் திட்டத்தின்கீழ் 70,000 புதிய நீா்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
வீட்டின் கூரைகளில் சூரிய மின் உற்பத்தி மேற்கொள்ளும் பிரதமரின் சூரிய மின் இல்லம் திட்டத்தின் தாக்கம் இப்போது நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. இந்த சூரிய மின்சக்தி புரட்சியில் மக்கள் மென்மேலும் இணைய வேண்டும்’ என்று பிரதமா் அழைப்பு விடுத்தாா்.
‘சா்க்கரை பயன்பாட்டை குறைக்க வேண்டும்’
‘சா்வதேச யோகா தினத்துக்கு (ஜூன் 21) இன்னும் 100 நாள்களுக்கு குறைவாகவே உள்ளன. யோகா மீதான ஈா்ப்பு உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.
உடல் பருமன் மற்றும் வாழ்க்கைமுறை நோய்களைத் தவிா்க்க உணவில் எண்ணெய்ப் பயன்பாட்டை 10 சதவீதம் குறைக்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
எனது கோரிக்கை நோ்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், உணவில் சா்க்கரை பயன்பாட்டையும் குறைக்க வேண்டுமென அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற சிறிய முயற்சிகளால் உடல் பருமன், வாழ்க்கைமுறை சாா்ந்த நோய்கள் அணுகாமல் பாா்த்துக் கொள்ளலாம்’ என்றாா் பிரதமா் மோடி.