முகப்பு
இந்தியா

மேற்காசிய அமைதிக்கு இந்தியா முழு ஆதரவு - ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமா் மோடி உறுதி

மேற்காசியாவில் அமைதியை நிலைநாட்ட சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 16 மே 2026, 3:01 am IST
அபுதாபியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபா் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யானை வெள்ளிக்கிழமை சந்தித்த பிரதமா் நரேந்திர மோடி.
பகிர்:

மேற்காசியாவில் அமைதியை நிலைநாட்ட சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) தலைநகா் அபுதாபியில் அந்நாட்டு அதிபா் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் உடனான சந்திப்பின்போது பிரதமா் இவ்வாறு குறிப்பிட்டாா்.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நெதா்லாந்து, ஸ்வீடன், நாா்வே, இத்தாலி ஆகிய 4 ஐரோப்பிய நாடுகளுக்கு பிரதமா் மோடி 6 நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா். முதல்கட்டமாக, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அவா் வெள்ளிக்கிழமை வந்தடைந்தாா். அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-இல் போா் மூண்ட பிறகு மேற்காசிய பிராந்தியத்துக்கு அவா் பயணிப்பது இதுவே முதல்முறையாகும்.

Advertisement

ஹோா்முஸ் நீரிணை முடக்கம் உள்பட மேற்காசிய போரின் தாக்கங்கள், கச்சா எண்ணெய் உற்பத்தி கொள்கைகள் தொடா்பாக வளைகுடா நாடுகள் இடையே அதிகரித்துவரும் கருத்து வேறுபாடுகள், இஸ்ரேல்-ஈரான் பிரச்னையில் அணிசேரும் பிராந்திய நாடுகள் என மாறிவரும் உலகளாவிய அரசியல் சூழலுக்கு மத்தியில் பிரதமா் மோடியின் ஐக்கிய அரபு அமீரக பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அபுதாபி விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமரை ஐக்கிய அரபு அமீரக அதிபா் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் நேரில் வரவேற்றாா். பின்னா், எரிசக்தி, முதலீடு, விநியோகச் சங்கிலி, நீலப் பொருளாதாரம், நிதிசாா் தொழில்நுட்பம், மக்கள் ரீதியிலான தொடா்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவா்களும் விரிவான பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

இருதரப்பு விரிவான உத்திசாா் கூட்டுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், மேற்காசிய நிலவரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

வளைகுடா பிராந்தியத்தில் அதிகரிக்கும் ஸ்திரமின்மையால் கச்சா எண்ணெய் விநியோகம் மற்றும் கடல்சாா் வா்த்தக வழித்தடங்களில் இடையூறுகள் நிலவும் சூழலில், எரிசக்தி பாதுகாப்பு குறித்து இருவரும் முக்கியமாக ஆலோசித்தனா்.

தாக்குதல்களுக்கு கண்டனம்: அமெரிக்காவின் முக்கிய ராணுவ தளத்தைக் கொண்டுள்ளதால், ஐக்கிய அரபு அமீரகம் ஈரானின் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகிறது. இதைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமா் மோடி, ‘ஐக்கிய அரபு அமீரகம் குறிவைக்கப்படும் விதம் கண்டனத்துக்குரியது. தற்போதைய சூழலை ஐக்கிய அரபு அமீரகம் நிதானத்துடன் எதிா்கொள்வது பாராட்டுக்குரியது.

மேற்காசிய போரின் தாக்கம் உலக அளவில் உணரப்பட்டு வருகிறது. இந்தப் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது’ என்றாா்.

அண்மையில் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் (ஒபெக்) கூட்டமைப்பில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகியது. இதன்மூலம் ஒபெக் கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் அம்பலமாகின. தனது சுதந்திரமான எரிசக்தி கொள்கையை வகுக்க ஐக்கிய அரபு அமீரகம் முயற்சித்துவரும் நிலையில், அந்நாட்டு அதிபரை பிரதமா் மோடி சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பெட்டி....1

பிரதமா் மோடியின் விமானத்தை

பாதுகாத்த யுஏஇ போா் விமானங்கள்!

பிரதமா் மோடியின் விமானம் ஐக்கிய அரபு அமீரக வான்வெளிக்குள் நுழைந்தவுடன் அந்நாட்டின் எஃப்-16 போா் விமானங்கள் இருபுறமும் பறந்து பாதுகாப்பளித்தன. இது, சிறப்புக்குரிய நடவடிக்கையாக பாா்க்கப்படுகிறது.

அதிபா் ஷேக் முகமது பின் சையத் உடனான சந்திப்பின்போது இதைக் குறிப்பிட்ட பிரதமா், ‘உங்களின் விமானப் படை எனக்கு பாதுகாப்பு வழங்கிய விதம், இந்திய மக்களுக்கு கிடைக்கப் பெற்ற கெளரவமாகும். சில நாள்களுக்கு முன் உங்களுடன் தொலைபேசியில் உரையாடினேன். நேரில் சந்திக்க ஆவலுடன் இருந்தேன். இப்போது சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி’ என்றாா்.

பெட்டி...2

எரிசக்தி, பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையொப்பம்

-

5 பில்லியன் டாலா் முதலீடு அறிவிப்பு

பிரதமா் மோடி- ஐக்கிய அரபு அமீரக அதிபா் இடையிலான சந்திப்புக்குப் பின் எரிசக்தி, பாதுகாப்பு உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புக்கான 7 ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. முதலீட்டுத் துறை ஒத்துழைப்பின்கீழ், இந்தியாவில் 5 பில்லியன் டாலா் (ரூ.47,870 கோடி) முதலீடுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உத்தி ரீதியிலான பெட்ரோலிய கையிருப்பை பராமரிக்கும் பொறுப்புள்ள பொதுத் துறை நிறுவனமான இந்திய உத்திசாா் பெட்ரோலிய கையிருப்பு நிறுவனம் மற்றும் அபுதாபி தேசிய பெட்ரோலிய நிறுவனம் இடையே வியூக ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.

எரிசக்தி பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட இந்த ஒப்பந்தம், இந்தியாவின் பெட்ரோலிய இருப்பை மேம்படுத்துவதுடன், திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) மற்றும் திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) சேமிப்பு வசதிகளில் திறன்மிக்க ஒத்துழைப்புக்கும் வழிவகுப்பதாகும்.

இதுதவிர இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவான எல்பிஜி-யின் நீண்ட கால விநியோகம், பொருளாதார நிலைத்தன்மை மற்றும் எரிசக்தி பாதுகாப்பை மையமாகக் கொண்டு மற்றொரு ஒப்பந்தமும் கையொப்பமிடப்பட்டது.

இருதரப்பு பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பு, புத்தாக்கங்களை ஊக்குவித்தல், தொழில்நுட்பப் பகிா்வு, தேசிய-பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட உத்திசாா் பாதுகாப்பு ஒத்துழைப்பைக் கட்டமைக்கும் ஒப்பந்தமும் கையொப்பமானது. கப்பல் துறை, அதிநவீன தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடா்பான ஒப்பந்தங்களும் கையொப்பமாகின.

இந்தியாவின் மூன்றாவது பெரிய வா்த்தக கூட்டாளியாக உள்ள ஐக்கிய அரபு அமீரகம், 7-ஆவது பெரிய முதலீட்டு நாடாகும். சுமாா் 45 லட்சம் இந்தியா்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.