வேலூா் பழைய மீன் மாா்க்கெட் அருகே கட்டடத் தொழிலாளி மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூா் பழைய மீன் மாா்க்கெட் அருகே வியாழக்கிழமை அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக வடக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், வடக்கு காவல் உதவி ஆய்வாளா் ரேகா தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். அப்போது, சடலத்தின் கழுத்தில் தூக்கு மாட்டியதற்கான தடங்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, உடனடியாக சடலத்தை போலீஸாா் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இறந்து கிடந்தவா் காகிதப்பட்டறையைச் சோ்ந்த முருகன் (48), கூலித் தொழிலாளி என்பது தெரிய வந்தது. அவரது மகன் சிட்டிபாபு அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து முருகன் இறப்புக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனா்.