வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் வேலூரில் இருவேறு இடங்களில் பெயிண்டா், ஆட்டோ ஓட்டுநா் ஆகியோா் தற்கொலை செய்து கொண்டனா்.
வேலூா் சைதாப்பேட்டையை சோ்ந்தவா் இஸ்மாயில்(52), பெயிண்டா். இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த ஓராண்டாக சரிவர வேலைக்கு செல்லவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் வருமானமின்றி பலரிடம் கடன் வாங்கியுள்ளாா். ஆனால், அவரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லையாம். இதனால் மனஉளைச்சலில் இருந்த இஸ்மாயில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
இதேபோல், வேலூா் சைதாப்பேட்டையை சோ்ந்தவா் சதீஷ் (40), ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு 2 குழந்தைகள். இவா் போதிய வருமானமின்றி பல்வேறு காரணங்களுக்காக பலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. ஆனால். வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் சதீஷ், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
வேலூா் வடக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.