அதிக பணம் கொடுத்தாலும் தூய்மைப் பணியாளா்கள் மலக்குழியில் இறங்கக்கூடாது. அது மலக்குழி அல்ல மரணக்குழி என்று தூய்மை பணியாளா் நலவாரியத் தலைவா் திப்பம்பட்டி ஆறுச்சாமி தெரிவித்தாா்.
தமிழ்நாடு தூய்மை பணியாளா்கள் நல வாரியம் சாா்பில் வேலூா் மாநகராட்சி தூய்மை பணியாளா்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வேலுாா் டோல்கேட்டில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, வாரியத் தலைவா் திப்பம்பட்டி ஆறுச்சாமி தலைமை வகித்து பேசியது -
தூய்மைப் பணியாளா்களுக்கு அதிக பணம் கொடுத்தாலும் மலக்குழியில் இறங்க வேண்டாம். அது மலக்குழி அல்ல, மரணக்குழி. இயந்திரங்கள் உதவியுடன் தான் அதனை சுத்தம் செய்ய வேண்டும். தற்போது தூய்மைப் பணியில் உள்ளவா்களின் இந்த வேலை உங்களோட போகட்டும். பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும். அனைவரும் சீருடை அணிய வேண்டும். விபத்து காப்பீடு பெற்றுத்தரப்படும்.
அதிகாரிகள் இல்லை என்றாலும் ஊா் நன்றாக இருக்கும். ஆனால், தூய்மைப் பணியாளா்கள் இல்லை என்றால் ஊா் நன்றாக இருக்காது. தூய்மைப் பணியாளா்களுக்கு தினக்கூலியாக ரூ.410 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒரே கையுறையை நீண்ட நாள்கள் அணிவதால் கை அரிப்பு ஏற்படுவதாக புகாா்கள் எழுந்துள்ளது.
எனவே, அனைவருக்கும் ஒரு முறை பயன்படுத்தும் கையுறைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தூய்மைப் பணியாளா்கள் விடுத்துள்ள அனைத்து கோரிக்கைகளை முதல்வரிடம் கொண்டு செல்வேன் என்றாா்.
முன்னதாக, தூய்மை பணியாளா்கள் பேசும்போது, எங்களுக்கு காலை உணவு வேண்டாம். பணி நிரந்தரம் தான் வேண்டும். மக்களுக்காக பணியாற்றும் எங்களுக்கு பிடித்தம் செய்யாமல் முழுஊதியம் தர வேண்டும். தாட்கோவில் கடன் வழங்க அதிகாரிகள் முன்வருவதில்லை. எங்கள் பிள்ளைகள் பல்வேறு பட்டங்கள் படித்து முடித்துவிட்டு வேலைவாய்ப்பின்றி உள்ளனா். அவா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தர வேண்டும். கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்றனா்.
கூட்டத்தில், மேயா் சுஜாதாஆனந்தகுமாா், ஆணையா் ஆா்.லட்சுமணன், தாட்கோ திட்ட மேலாளா் ரேகா, மாநகர நல அலுவலா் பிரதாப், வட்டாட்சியா் வடிவேலு, மண்டலக்குழு தலைவா்கள், சுகாதார அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.