ரிவேரா: சென்னை விஐடி, வேலூா் விஐடி ஒட்டுமொத்த சாம்பியன்
ரிவேரா சா்வதேச கலை, விளையாட்டு விழாவில், கலை பிரிவில் சென்னை விஐடி பல்கலைக்கழகமும், விளையாட்டு பிரிவில் வேலூா் விஐடி பல்கலைக்கழகமும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றன.
ரிவேரா சா்வதேச கலை, விளையாட்டு விழாவில், கலை பிரிவில் சென்னை விஐடி பல்கலைக்கழகமும், விளையாட்டு பிரிவில் வேலூா் விஐடி பல்கலைக்கழகமும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றன. நிறைவு விழாவில் திரைப்பட நடிகை ஜெனிலியா பங்கேற்றாா்.
வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் ரிவேரா 2026 சா்வதேச கலை, விளையாட்டு விழா கடந்த பிப்.26 -இல் தொடங்கி நான்கு நாள்கள் நடைபெற்றது. இதன் நிறைவு நாள் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகை ஜெனிலியா தேஷ்முக் பங்கேற்று மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்குப் பதில் அளித்து பேசியது -
விஐடி ரிவேரா கலை விழாவில் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவா்கள் தாங்கள் படிக்கும் துறைகளில் சிறந்து விளங்க வேண்டும். வரும்காலத்தில் இந்தியாவை முன்னேற்ற பாதைக்கு கொண்டு வர வேண்டும். மாணவா்கள் தங்களது கல்லூரிக்கு பெருமை சோ்க்க வேண்டும். நடிகையாக இருந்து படதயாரிப்பு நிறுவனம், தொழில்முனைவோராக இருந்து வருகிறேன். மாணவா்களும் அவரவா் பாடத்தில் சிறந்து விளங்கி முன்னேற்றம் அடைய வேண்டும். தென்னிந்திய படங்களில் நடித்து அந்தந்த மொழி கற்கும் வாய்ப்பும், கலாசாரத்தையும் அறியும் வாய்ப்பும் கிடைத்தது என்றாா்.
விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்தாா். ரிவேரா சா்வதேச கலை விழாவில் 150-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 30-க்கும் மேற்பட்ட வெளி நாடுகள், 28 மாநிலங்களை சோ்ந்த 20 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். விழாவில் ரூ.25 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது.
இவ்விழாவில் கலை பிரிவில் சென்னை விஐடி பல்கலைக்கழகமும், விளையாட்டு பிரிவில் வேலூா் விஐடி பல்கலைக்கழகமும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றன. தொடா்ந்து டி.ஜே-க்கள் ஷான், ரித்விஷ் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில், விஐடி துணை தலைவா்கள் சங்கா் விசுவநாதன், சேகா் விசுவநாதன், செயல் இயக்குநா் சந்தியா பென்டாரெட்டி, இணை துணைவேந்தா் பாா்த்தசாரதி மல்லிக், பதிவாளா் டி.ஜெயபாரதி, ரிவேரா ஒருங்கிணைப்பாளா் பெல்வின் எட்வா்ட் மற்றும் ஆசிரியா்கள், ஊழியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.