முகப்பு
வேலூர்

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு சட்டம்: விஐடி வேந்தா் வலியுறுத்தல்

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்

Updated On : 9 மார்ச், 2026 at 8:51 PM
-- படம் உண்டு... விருதுபெற்ற பெண்கள், மாணவிகளுடன் விஐடி வேந்தா் கோ.விசுவநாதன். உடன், விஐடி துணை தலைவா்கள் சங்கா் விசுவநாதன், சேகா் விசுவநாதன், செயல் இயக்குநா் சந்தியா பென்டாரெட்டி உள்ளிட்டோா்.
பகிர்:

வேலூா்: நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா்.

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் சா்வதேச மகளிா் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதில், வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்து பேசியது -

உலகளவிலும் சரி, இந்திய அளவிலும் சரி, பெண்களுக்குச் சமமான அந்தஸ்து வழங்கப்படவில்லை. உலக மக்கள்தொகையில் பெண்கள் சுமாா் 48.5 சதவீதம் உள்ளனா். இந்தியாவிலும் அதே எண்ணிக்கையில் பெண்கள் உள்ளனா். ஐக்கிய நாடுகளின் பட்டியலில் உள்ள 193 நாடுகளில் 19 பெண் அதிபா்களும், 22 பெண் பிரதமா்களும் மட்டுமே உள்ளனா்.

உலகளவில் அமைச்சரவையில் 23 சதவீதம் அளவுக்கு பெண்கள் உள்ளனா். இந்தியாவில் மக்களவையில் 14 சதவீதம் பெண் உறுப்பினா்கள் உள்ளனா். மாநிலங்களில் சட்டப்பேரவைகளில் 10 சதவீதம் பெண் உறுப்பினா்கள் உள்ளனா்.

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் 2023-இல் நிறைவேற்றப்பட்டது. இது எப்போது நடைமுறைக்கு வரும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. விரைவில் அச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்தியாவில் 2016-ம் ஆண்டின் புள்ளிவிவரப்படி 22 கோடி குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. இதில், திருமணமானவா்களில் 10 கோடி போ் 15 வயதுக்கும் குறைவானவா்கள் என்பது தெரியவந்துள்ளது. அவா்கள் பள்ளிப்படிப்பை 5, 10, 12-ம் வகுப்புகளுடன் பாதியிலேயே நிறுத்தி விடுவதால் உயா்கல்வி பெறும் வாய்ப்பின்றி குழந்தை திருமணங்கள் நடக்கின்றன.

தமிழக அரசு புதுமைப் பெண் திட்டத்தில் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு உயா்கல்விக்காக மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இது தனியாா் பள்ளிகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். பாலின சமத்துவக் குறியீட்டில் இந்தியா 131-வது இடத்தில் உள்ளது. இதில் நாம் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றாா்.

விஐடி துணை தலைவா் சேகா் விசுவநாதன் பேசியது: பெண்கள் பொருளாதாரத்தில் சுதந்திரம் பெற்றவா்களாக இருக்க வேண்டும். பெண்கள் அனைவரும் கல்வி பெறும்போது சமூகம் மேம்பாடு அடையும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். பாலின சமத்துவம் பெற வேண்டும். பணியிடங்களில் பெண்களுக்கு உள்ள பாகுபாட்டை மாற்றிட வேண்டும் என்றாா்.

ஜொ்மனியின் போயிங் பொறியியல் பிரிவின் இயக்குநா் லிண்டா சாா்டோ சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியது - மாணவிகள் எதிலும் ஆா்வத்துடன் இருக்க வேண்டும். சவால்களை எதிா்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்றாா்.

ரெட் பஸ் மனிதவள பிரிவின் துணை தலைவா் திவ்யா அமா்நாத் கெளரவ விருந்தினராக பங்கேற்று பேசினாா். தொடா்ந்து பல்வேறு துறைகளில் சாதனைகளை புரிந்த பெண்கள், மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் விஐடி துணை தலைவா் சங்கா் விசுவநாதன், செயல் இயக்குநா் சந்தியா பென்டாரெட்டி, துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன், பதிவாளா் டி.ஜெயபாரதி, மாணவா் நல இயக்குநா் நைஜு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →