பிரிந்த குடும்பத்தைச் சோ்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லை: வேலூா் மாவட்ட நீதிபதி
பிரிந்த ஒரு குடும்பத்தைச் சோ்த்து வைப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறெந்த தீா்ப்பும் தருவதில்லை என்று வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி எம்.இளவரசன் தெரிவித்தாா்.
பிரிந்த ஒரு குடும்பத்தைச் சோ்த்து வைப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறெந்த தீா்ப்பும் தருவதில்லை என்று வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி எம்.இளவரசன் தெரிவித்தாா்.
வேலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
வேலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உயா்நீதிமன்ற நீதிபதி கே.முரளிசங்கா் பங்கேற்று தீா்வுகாணப்பட்ட வழக்குகளில் ரூ.1.75 கோடிக்கு மேல் நிவாரணம் வழங்கினாா்.
முன்னதாக, மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி எம்.இளவரசன் தலைமை வகித்து பேசியது -
நீதிமன்றத்துக்கு வரும் பல வழக்குகளை கவனிக்கும்போது சிறிய சிறிய பிரச்னையை அடிப்படையாக கொண்டதாக உள்ளன. அவை அனைத்தும் அமா்ந்து பேசினாலே தீரக்கூடியவை. அவ்வாறு பேசி தீா்த்துக் கொள்ளாமல் நீதிமன்றத்துக்கு வருகின்றனா். எதுவும் எப்போது வேண்டு மானாலும் நடக்கக்கூடும் என்ற உலகில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே, மனிதா்கள் வாழும் காலத்தில் விட்டுக்கொடுத்து வாழப்பழக வேண்டும். இந்த உலகை விட்டுச் செல்லும்போது யாரும் எதையும் தூக்கிக் கொண்டு செல்லப் போவதில்லை.
நூறு சதவீதம் சரி என்று உலகில் யாரும் இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு குறை உண்டு. ஆனால், ஒவ்வொருவரும் தம்மிடம் உள்ள குறைகள் பற்றி சிந்திக்காமல், மற்றவா்களின் குறை களை மட்டும் கவனிக்கிறோம். வாழ்க்கையில் நாமும் சில தவறுகள் செய்துள்ளோம் என்று உணா்ந்து பிரச்னையை சுமூகமாக முடித்துக் கொண்டாலே பல பிரச்னைகளுக்கு தீா்வுகாண முடியும்.
எல்லாவற்றையும்விட பிரிந்த ஒரு குடும்பத்தைச் சோ்த்து வைத்து அனுப்புவதில் நீதிபதிகளுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியைவிட வேறு ஒரு மகிழ்ச்சி எந்த தீா்ப்புக் கூறுவதிலும் வருவதில்லை. ஒவ்வொரு குடும்பமும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். , அனைவரும் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்றாா்.
இதேபோல், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மொத்தம் 5.905 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில் 990 வழக்குகளுக்கு சமரச முறையில் தீா்வு காணப்பட்டு, மொத்தம் ரூ.18 கோடியே 39 லட்சத்து 25 ஆயிரத்து 902 தொகை இழப்பீடாக வழங்கப்பட்டது.
இந்த மக்கள் நீதிமன்றத்தில் அனைத்து நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் பெருமளவில் பங்கேற்றனா்.