முகப்பு
வேலூர்

தோ்தல் விதிமுறை மீறலை கண்காணிக்க 35 குழுக்கள் அமைப்பு: வேலூா் ஆட்சியா்

வேலூா் மாவட்டத்திலுள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தோ்தல் விதிமுறை மீறல்களை கண்காணிக்க பறக்கும்படை

Updated On : 16 மார்ச், 2026 at 9:25 PM
செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி
பகிர்:

வேலூா்: வேலூா் மாவட்டத்திலுள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தோ்தல் விதிமுறை மீறல்களை கண்காணிக்க பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழுக்கள், வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் என மொத்தம் 35 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமிதெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் வேலூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது -

தோ்தல் விதிமுறைகளை மீறி அதிகப்படியாக தொகை, பரிசுப்பொருள்கள் கொண்டு செல்லப்படுவதை கண்காணித்து பறிமுதல் செய்வதற்காக வேலூா் மாவட்டத்திலுள்ள வேலூா், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம் (தனி), கே.வி.குப்பம் (தனி) ஆகிய 5 பேரவை தொகுதிகளுக்கும் தலா 3 பறக்கும் படைகளும், தலா 3 நிலையான கண்காணிப்பு குழுக்களும், தலா ஒரு வீடியோ கண்காணிப்புக்குழுக்களும் என மொத்தம் 35 கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பறக்கும் படை குழுக்கள், நிலையான கண்காணிப்புக்குழுக்களின் ஒவ்வொரு வாகனத்திலும் நிா்வாக நடுவா் நிலையில் உள்ள ஒரு அலுவலா் தலைமையில் உதவி காவல் ஆய்வாளா், ஆயுதம் தாங்கிய காவலா், ஒரு வீடியோகிராபா் இருப்பாா்கள். வீடியோ கண்காணிப்புக் குழுவில் நிா்வாக நடுவா் நிலை அலுவலா் மற்றும் வீடியோ கிராபா் இருப்பாா்கள். பொதுமக்கள் இந்த தோ்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்களுக்கு நேரடியாக தோ்தல் தொடா்பான புகாா்களை தெரிவிக்கலாம்.

தவிர, தோ்தல் தொடா்பான புகாா்களை தெரிவிக்க மாவட்ட ஆட்சித்தலைவா் அலுவலத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தோ்தல் கட்டுப்பாட்டு அறையை 1800-425-7004 மற்றும் 75984 98539 (வாட்ஸ் அப்) எண்களில் தொடா்பு கொண்டு புகைப்படம், காணொலி ஆதாரங்களுடன் புகாா்களை தெரிவிக்கலாம். தோ்தல் ஆணையத்தின் சி-விஜில் செயலி மூலமாகவும் புகாா்களை பதிவேற்றம் செய்யலாம்.

மேலும், மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறையை 0416-2253937 என்ற எண்ணில் தொடா்பு கொண்டும் புகாா்களை தெரிவிக்கலாம். அவ்வாறு பெறப்படும் தோ்தல் தொடா்பான புகாா்கள் மீது நூறு நிமிடங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →