குடியாத்தத்தின் அடையாளம்தான் கெங்கையம்மன்
குடியாத்தத்தின் அடையாளமாகத் திகழ்கிறது கெங்கையம்மன். எங்கள் பண்பாட்டின் சிகரம்' என்கிறார் குடியாத்தம் கம்பன் கழகச் செயலாளர் கே.எம்.பூபதி.
'குடியாத்தத்தின் அடையாளமாகத் திகழ்கிறது கெங்கையம்மன். எங்கள் பண்பாட்டின் சிகரம்' என்கிறார் குடியாத்தம் கம்பன் கழகச் செயலாளர் கே.எம்.பூபதி, அவர் கூறியது:
''பெண்களைத் தெய்வமாக வணங்குவது தமிழர் மரபு. அவ்வாறு, எங்கள் பகுதி மக்களின் ஒட்டுமொத்தத் தெய்வம்தான் கெங்கையம்மன்.
வேலூர் மாவட்டத்தில் முக்கிய திருவிழாவான அம்மன் சிரசு பெருவிழா, கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் திருவிழா. உலகில் எந்தப் பகுதியில் இருக்கும் வேலூர் மாவட்ட மக்கள் இந்தத் திருவிழாவுக்கு வந்து, அம்மனை தரிசிக்கின்றனர்.
Advertisement
Advertisement
கெளண்டன்ய மகாநதியின் கரையில் குடிகொண்டுள்ள கெங்கையம்மன் கோயில் திருவிழா சில நூற்றாண்டுகளாக நடைபெறும் பிரசித்தி பெற்ற விழா. ஜாதி மத,இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து, அமைதியாக நடைபெறும் அற்புதமான திருவிழா.
கெங்கையம்மனையும், அம்மன் சிரசுவைப் பார்த்தாலே பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் எழும். பார்த்த நேரத்தில் உடலும் புத்துணர்வை அடையும். உள்ளம் அமைதியுறும்.
நடுப்பேட்டையில் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் வரும்போது, முஸ்லிம்கள் திரளாக நின்று வரவேற்பதும், பக்தர்களுக்கு குளிர்பானங்கள், உணவுகளை அளிப்பதும் தொன்றுதொட்டு நடைபெறுகிறது. இதுபோன்ற ஒரு நிகழ்வு வேறு எங்கும் காணமுடியாது.
அம்மன் சிரசுவை வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வரவேற்கின்றனர். தாய் வீட்டில் இருந்து விடைபெறும்போது, கண்ணீர் விட்டு வழியனுப்பி வைக்கின்றனர். குடியாத்தம் நகர மக்கள் எந்த முக்கிய முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும், கெங்கையம்மனை நேரில் வழிபட்டோ, மனமுருக வேண்டியோ காரியங்களைத் தொடங்குவர்'' என்கிறார் பூபதி.
தொகுப்பு : கே.நடராஜன்