கோயம்புத்தூர்

இடைத் தேர்தல் சூட்டை தணித்த அதிமுக!

கோவை, ஜூலை 21: கட்சி துவங்கிய சில மாதங்களிலேயே இடைத் தேர்தலைச் சந்தித்து அதில் வெற்றியும் பெற்று சாதனைபுரிந்த அதிமுக, தற்போது இடைத் தேர்தலையே புறக்கணித்துள்ளது.  இதுவரை நடந்த இடைத் தேர்

சிவ. மணிகண்டன்

கோவை, ஜூலை 21: கட்சி துவங்கிய சில மாதங்களிலேயே இடைத் தேர்தலைச் சந்தித்து அதில் வெற்றியும் பெற்று சாதனைபுரிந்த அதிமுக, தற்போது இடைத் தேர்தலையே புறக்கணித்துள்ளது.

 இதுவரை நடந்த இடைத் தேர்தல்கள் தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்திய வரலாறு உண்டு. அணி மாற்றம், ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளம் என்பன இதில் அடங்கும்.

 1972-ல் அதிமுகவை எம்ஜிஆர் துவக்கியபோது அடுத்த சில மாதங்களிலேயே திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலை கட்சி எதிர்கொண்டது. முதன்முதலாக இத் தேர்தலில் களம் இறங்கிய அதிமுகவுக்கு, "இரட்டை இலை' சின்னம் கிடைத்தது.

 தமிழகத்தில் அப்போது ஆளுங்கட்சியாக இருந்த திமுக, மத்தியில் ஆளும்கட்சியாக இருந்த காங்கிரஸ் என, பலத்த போட்டிக்கு இடையே அதிமுக தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து 1974-ல் நடந்த கோவை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்றது.

 இவ்விரு இடைத் தேர்தல்களிலும் கிடைத்த தொடர் வெற்றிகள், 1977-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வழிவகுத்தது. அதோடு 1977-ல் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது அதிமுக.

 1980-ல் மக்களவைத் தேர்தலுடன் சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, குமரி மாவட்டம் விளவன்கோடு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தது. மக்களவைத் தேர்தலில் அதிமுக தோல்வியைச் சந்தித்தபோதிலும், பனமரத்துப்பட்டி பேரவைத் தொகுதி வெற்றி ஆறுதல் அளிப்பதாக அமைந்தது. அதன்பிறகு அதிமுக-காங்கிரஸ் கூட்டணி இடையே விரிசல் ஏற்பட்டது.

 இப்படியிருக்க, 1985-ல் நடந்த திருப்பத்தூர் தொகுதி (தற்போதைய சிவகங்கை மாவட்டம்) இடைத் தேர்தல் மீண்டும் அதிமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு பாலம் அமைத்துக் கொடுத்தது.

 அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பல்வேறு இடைத் தேர்தல்களும் ஆளுங்கட்சிக்கே சாதகமாக இருந்து வருகிறது.

 கடந்த ஆண்டு நடந்த திருமங்கலம் இடைத் தேர்தல் நாட்டையே "மதுரை' பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. அதிகாரிகள் இடமாற்றம், தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை என தேர்தல் ஆணையத்துக்கே சவாலாக இருந்த இத் தேர்தலில், அனைவரும் எதிர்பார்த்ததைப் போலவே திமுக வெற்றி பெற்றது.

 அதைத் தொடர்ந்து நடந்த மக்களவைத் தேர்தலிலும் பெரும்பான்மையோரின் கணிப்பை பொய்யாக்கி திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.

 மக்களவைத் தேர்தலுக்கான திமுக செயல்வீரர்கள் கூட்டங்களில் திருமங்கலம் "பாணி'யை பின்பற்ற வேண்டுமென கட்சியினருக்கு அறிவுரை வழங்கும் அளவுக்கு, திருமங்கலம் இடைத் தேர்தல் திமுகவினரால் அனுபவ பாடமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

 இச் சூழலில் தற்போது நடைபெற உள்ள தொண்டாமுத்தூர், பர்கூர், இளையான்குடி, கம்பம், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. பாமகவும், மதிமுகம் அதே நிலைபாட்டை எடுத்துள்ளன. இடதுசாரிகள் தனித்துப் போட்டியிட விரும்பமாட்டார்கள் எனத் தெரிகிறது.

 இத் தொகுதிகளில் திமுக-தேமுதிக தான் பிரதான கட்சிகளாக களம் இறங்கப்போகின்றன. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதிகளில் கொங்கு முன்னேற்றக் கழகம் போட்டியிட உள்ளது. பிரதான எதிர்க் கட்சிகளின் புறக்கணிப்பு, தேர்தல் "சூட்டை' தணித்துவிட்டது. இருப்பினும் தொண்டாமுத்தூர் தொகுதியில் கொமுக, ஆளுங்கட்சிக்கு சவாலாக இருக்கும்.

 பிரதான எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணிக்கும் நிலையில், 2009 இடைத் தேர்தல் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT