ஈரோடு,அக். 1 மாணவர் சேர்க்கையில் ஏற்பட்டுள்ள தொடர் மந்தம் காரணமாக பல தனியார் ஐடிஐ-கள் செயல்பட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி மற்றும் திருச்சி ஆகிய 5 மண்டலங்களில் 50 அரசு ஐடிஐ-களும், 600 தனியார் ஐடிஐ-களும் உள்ளன. இதில் ஒவ்வொரு ஐடிஐயிலும் 100 முதல் 140 மாணவர்களுக்குத் தொழில் பயிற்சி அளிக்க முடியும்.
ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக ஐடிஐகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. தற்போதுள்ள நிலையில் ஒவ்வொரு தனியார் ஐடிஐயிலும் சராசரியாக 40 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர்.
பாலிடெக்னிக்னில் சேர்வதற்கு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் கணக்கு மற்றும் அறிவியல் பாடத்தில் 40 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதிநிலை இருந்தது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும், பாலிடெக்னிக்கில் சேரலாம் என்று கடந்த 2003-ம் ஆண்டில் தமிழக அரசு அறிவித்தது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் கணக்கு மற்றும் அறிவியலில் 40 மதிப்பெண்களுக்கு குறைவாகப் பெற்ற மாணவர்களும் பாலிடெக்னிக்கில் சேர்ந்து விடுகின்றனர். இதனால், கடந்த 5 ஆண்டுகளில் ஐடிஐயில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கிவிட்டது.
அரசு ஐடிஐகளில் நடப்பு ஆண்டு முதல் பயிற்சிக் கட்டணம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், ஒவ்வொரு ஐடியிலும் சராசரியாக 20 இடங்கள் காலியாக உள்ளன. பொதுவாக ஆகஸ்ட் முதல் வாரத்தில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டு, செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் முடிவடையும். அரசு ஐடிஐகளில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இருப்பினும் அனைத்து ஐடிஐகளிலும் காலி இடங்கள் உள்ளன.
டிப்ளமோ படித்த பலர் வேலைதேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் ஐடிஐயில் தொழிற்பயிற்சி முடித்தவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.3000 மாத ஊதியத்தில் உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இருப்பினும் உயர்கல்வி வாய்ப்பு, பதவி உயர்வு, போன்ற காரணங்களினால் பாலிடெக்னிக்கில் சேருவதையே மாணவர்கள் விரும்புகின்றனர்.
இதுகுறித்து தனியார் ஐடிஐ முதல்வர் ஒருவர் கூறியது:
10-ம் வகுப்பு தேர்ச்சித் தகுதியை மட்டும் வைத்து பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கைக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுபோல் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களையும் ஐடிஐயில் அனைத்துப் பயிற்சிப் பிரிவுகளிலும் சேர்க்க அனுமதிக்க வேண்டும். ஐடிஐயில் இரண்டு ஆண்டு பயிற்சி முடித்த மாணவர்களுக்கு, பாலிடெக்னிக்கில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு அனுமதி வழங்க வேண்டும்.
கர்நாடக மாநிலத்தில் தனியார் ஐடிஐ ஆசிரியர்களுக்கு, மாநில அரசு ஊதியம் வழங்குகிறது. அரசு ஐடிஐ ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஊதியத்தை தனியார் ஐடிஐ ஆசிரியர்களுக்கு தமிழக அரசே வழங்க வேண்டும். அரசு ஐடிஐ ஆசிரியர்களின் ஊதியத்தில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே பெறும் தனியார் ஐடிஐ ஆசிரியர்களுக்கு, அரசு ஊதியம் வழங்கும் பட்சத்தில், இந்த ஆசிரியர்கள் மனநிறைவுடன் செயல்பட்டு திறமையான பணியாளர்களை உருவாக்க முடியும்.
பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால் தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. திறமையான பணியாளர்கள் வேண்டும் என்பதற்காக, பாலிடெக்னிக் படித்தவர்களை வேலைக்கு அமர்த்தி ஐடிஐ தகுதிக்கான பணியினை செய்யச் சொல்கின்றனர் என்றார்.
இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணை இயக்குநர் ஒருவரிடம் கேட்டபோது, அரசு ஐடிஐகள் அனைத்தும் தற்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது. புதிய இயந்திரங்கள் மற்றும் பயிற்சி உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் காலி இடங்களை வேறு வகுப்பைச் சேர்ந்தவர்களைக் கொண்டு, நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு ஐடிஐகளில் ஒரு சில பயிற்சிப் பிரிவுகளில் காலி இடங்கள் உள்ளன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.