ஈரோடு, செப். 24: கோழிநோய் ஆராய்ச்சிக் கூடங்களில், பறவைக்காய்ச்சல் நோய் குறித்து அறிவதற்கான ஆய்வு மையம் அமைப்பதற்கு அனுமதி வழங்கி ஒரு ஆண்டு முடிந்த பிறகும் மத்திய அரசு இதற்கான நிதியை ஒதுக்காததால், பணிகள் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பறவைக்காய்ச்சல் காரணமாக கோழிகள் அதிக அளவில் இறக்கின்றன. இந்நோய் காரணமாக கறிக்கோழி மற்றும் முட்டையின் விலை பல மடங்கு சரியும் நிலை ஏற்படுகிறது. நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கோழிப் பண்ணையாளர்களுக்கு கடந்த ஆண்டில் மட்டும் ஏறத்தாழ ரூ.1000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பல கோழிப் பண்ணைகள் செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இந்த நோய் குறித்து கண்டறிவதற்கான ஆய்வு மையம் தற்போது மத்திய பிரதேச மாநிலம் போபாலில் மட்டுமே உள்ளது.
இதனால் மாதிரிகளை அங்கு அனுப்பிவிட்டு முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டியுள்ளதால், கோழிப் பண்ணைகளில் உடனடியாக சிகிச்சை தொடங்க இயலாத நிலை உள்ளது. இதனால் கோழிகள் அதிக அளவில் இறந்துவிடுகின்றன என்பதை நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள ஏறத்தாழ 3000 கோழிப் பண்ணையாளர்கள் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.
இதனையடுத்து நாமக்கல் மற்றும் ஈரோட்டில் செயல்பட்டுவரும் கோழிநோய் ஆராய்ச்சிக் கூடங்களில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு குறித்து அறிந்துகொள்ளும் வகையில் முதல்கட்ட பரிசோதனை மையங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. மேலும் இதற்கான திட்ட மதிப்பீட்டை தயாரித்து அனுப்பும்படி கால்நடை மண்டல இணை இயக்குநர்களுக்கு கடந்த 2008 ஜூனில் அறிவுறுத்தியிருந்த்து.
இதற்கான திட்ட மதிப்பீடு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. திட்ட மதிப்பீடு வழங்கி ஏறத்தாழ ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில் இதற்கான நிதியை அரசு மத்திய அரசு இதுவரை ஒதுக்கவில்லை.
இதுகுறித்து கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநர் வி.தங்கவேலு கூறியது:
ஈரோடு கோழிநோய் ஆராய்ச்சிக் கூடத்தில், பறவைக்காய்ச்சல் நோய் குறித்த முதல்கட்ட சோதனையை மேற்கொள்வதற்கு, கட்டடம், மின்சாரம் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.22 லட்சத்திற்கு கடந்த ஆண்டு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும்.
பறவைக்காய்ச்சல் நோய் பாதிப்பு குறித்து கண்டறிவதற்கான முதல்கட்ட சோதனை மையமாக இந்த ஆய்வு மையம் இருக்கும். நோய் பாதிப்பு குறித்த இறுதி முடிவினை போபாலில் உள்ள ஆராய்ச்சி மையமே அறிவிக்கும். இருப்பினும் இந்த ஆய்வு மையத்தில் பெறப்படும் முடிவைப்பொருத்து, கோழிப்பண்ணைகளில் உடனடி சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
இந்த ஆய்வை மேற்கொள்ள ஒரு துணை இயக்குநர், முதுகலைப் பட்டம் பெற்ற கோழி நோய் ஆராய்ச்சி நிபுணர், நுண் உயிரியலில் முதுகலை பட்டம் பெற்ற ஒரு பெண் கால்நடை மருத்துவர் என தொழில்நுட்ப ரீதியாக தகுதிவாய்ந்த மருத்துவர்கள் குழு இந்த ஆய்வுக் கூடத்தில் உள்ளது.
மழைக்காலம் முடிந்து ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் பறவைக்காய்ச்சல் அறிகுறி தென்படும். இதற்கு முன்னரே நாமக்கல் மற்றும் ஈரோட்டில் பறவைக்காய்ச்சல் சோதனை மையங்களை அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கவேண்டும் என்று கோழிப்பண்ணையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.