முகப்பு
கோயம்புத்தூர்

பேராசிரியர்கள் பற்றாக்குறை: தடுமாறுது அரசு உதவிபெறும் கல்லூரிகள்!

ஈரோடு, ஆக. 24: ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும்  மாணவர்களின் கல்வித்தரம் மோசமான நிலைக்குத்  தள்ளப்பட்டுள்ளது.   தமிழகத்தில் தற்போது 133 அரசு உதவிபெற

Updated On : 20 செப்டம்பர், 2012 at 2:15 PM
பகிர்:

ஈரோடு, ஆக. 24: ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும்  மாணவர்களின் கல்வித்தரம் மோசமான நிலைக்குத்  தள்ளப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் தற்போது 133 அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு கல்லூரியிலும் 10 முதல் 30 வரை பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு உதவிபெறும் கல்லூரிகளிலும் 2000 பேராசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன.

   இத்தகைய கல்லூரிகளில் படிப்பவர்களில் 90 சதம் பேர் கிராமப்புறங்களை சேர்ந்த ஏழை மாணவர்கள். இங்குள்ள  பல பாடப்பிரிவுகளுக்கு போதிய அளவில் பேராசிரியர்கள் இல்லாததால் சில பாடப்பிரிவுகளில் இம்மாணவர்களுக்கு அடிப்படை கல்விகூட கிடைப்பதில்லை. நல்ல முறையில் கல்லூரிகளை நிர்வகிக்கும் திறன் உள்ள நிர்வாகங்கள், தற்காலிக பேராசிரியர்களை நியமித்து தங்களுடைய சொந்த நிதியில் இருந்து பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்குகின்றன. கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலக வாசலில் இந்த கல்வி நிறுவனங்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தாலும், புதிய பேராசிரியர்கள் நியமனத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை.  

Advertisement

  தமிழகத்தில் உதவிபெறும கல்லூரிகளில் பெரும்பான்மையானவை நிர்வாகச் சீர்கேடுகளால் உரிய பரமாரிப்பின்றி கிடக்கின்றன. இத்தகைய கல்லூரிகள் தற்போதுள்ள பேராசிரியர்களை கொண்டு, கல்லூரியின் வேலை நாட்களை கழித்துக்கொண்டிருக்கின்றன. இத்தகைய கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் பலர் கல்லூரியில் படித்த ஆண்டுகளுக்கு இணையாக தேர்வுகளில் முயற்சி செய்த பிறகே பட்டம் பெறும் நிலையில் உள்ளனர்.

  தரமான கல்வி அளிக்கப்பட்டால், திறமையான மாணவர்கள் உருவாக்கப்படுவார்கள். பல தனியார் நிறுவனங்கள் தகுதியான பணியாளர்களை தேடிக்கொண்டிருக்கின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நிர்வாகம், ஆட்சிப்பணி உள்ளிட்ட உயர் பொறுப்பு வகிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் கலை பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள். தற்போது பொறியியல், மருத்துவம் போன்ற தொழில் கல்வி படித்தவர்கள் இத்தகைய உயர் பதவிகளுக்கு அதிக எண்ணிக்கையில் வருகின்றனர்.  பல ஆட்சிப் பணி அதிகாரிகளை உருவாக்கிய பெருமையுடைய அரசு உதவிபெறும் கலைக் கல்லூரிகள், சில ஆண்டுகளாக இப்பெருமையை இழந்து வருகின்றன.  

  திறமையான மாணவர்கள் உருவாக்கப்படாததால், இந்த கல்லூரிகள் இத்தகைய பின்னடவை சந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆராய்ச்சிப் படிப்பு முடித்துவிட்டு மிகக்குறைந்த ஊதியத்தில் தனியார் கல்லூரிகளில் பணியாற்றி வரும் சாதனையாளர்கள், இளம் சாதனையாளர்களை உருவாக்கவும், கல்வித்தரம் மேம்படவும், அரசு உதவிபெறும் கல்லூரிகள் இழந்த பெருமையை மீட்டெடுக்கவும் பேராசிரியர் காலிப் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும்.  

   மொத்த நிதி ஒதுக்கீட்டில் 80 சத தொகை கல்வி வளர்ச்சிக்கென செலவிடப்படுகிறது என்று மத்திய, மாநில அரசுகள்  தம்பட்டம் அடித்துக்கொள்கின்றன.  உயர் கல்வி நிலையங்களான இக்கல்லூரிகளில் காலியாக பேராசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பபடுவதன் மூலமே கல்விக்கென செலவிடப்படும் பெருமளவு நிதி பயனுள்ளதாக இருக்கும். நடவடிக்கை எடுக்குமா அரசு?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.