உதகை, செப். 30: நீலகிரி மாவட்டத்தில் தேசிய வங்கிகளுக்கு இணையாக மாவட்டத்திலுள்ள 74 கூட்டுறவு கடன் சங்கங்களையும் கணினிமயமாக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
÷நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, குந்தா மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் கூட்டுறவுத் துறையின் மூலம் 74 கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்தக் கடன் சங்கங்களின் மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு விவசாயக் கடன், விவசாய நகைக் கடன், பயிர்க் கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன் திட்டங்களுடன், உரங்கள், விதைகள், நாற்றுகள், பூச்சிக் கொல்லி மருந்துகள் ஆகியவையும் வழங்கப்படுகின்றன. குறைந்த வட்டியில் கடன்களை வழங்குவதாலும், எளிமையான முறையில் கடன் திட்டங்கள் உள்ளதாலும் மக்கள் பெரிதும் பயனடைகின்றனர்.
இந்தக் கடன் சங்கங்கள் அனைத்தையும் கணினிமயமாக்க தற்போது கூட்டுறவுத்துறை தீர்மானித்துள்ளது. இதற்காக கூட்டுறவுச் சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் அனைத்துக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் செயலர்களுக்கும் தற்போது முழுமையான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 25 கடன் சங்கங்களும், இரண்டாவது கட்டமாக 25 கடன் சங்கங்களும், மூன்றாவது கட்டமாக 24 கடன் சங்கங்களும் கணினிமயமாக்க கூட்டுறவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்பணிகள் இன்னும் ஓராண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பணிகள் நிறைவடைந்தால் வாடிக்கையாளர்களுக்கான பணிகளை தேசிய வங்கிகளுக்கு இணையாக விரைவில் முடித்துக் கொடுக்க முடியும்.
இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவு அமைப்பின் சார்பில் பொது சேவை தகவல் மையங்களும் தொடங்கப்படுகின்றன. இதன் மூலம் கிராமப்புறங்களிலுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கான பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டணங்களை செலுத்தவும், ரயில் மற்றும் விமானப் பயணத்திற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொளளவும் வசதி ஏற்படும்.
அத்துடன் நிலம் மற்றும் கட்டடங்கள் தொடர்பாக சிட்டா மற்றும் அடங்கல் போன்ற சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் தற்போது மாவட்டத்தில் ஒரு சில கூட்டுறவுச் சங்கங்களில் மட்டுமே செயல்படும் விவசாய மருத்துவ மையங்களை அனைத்து சங்கங்களிலும் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த மையங்களின் மூலம் மண் பரிசோதனை மற்றும் பருவநிலைக்கேற்ப உரங்கள் இடுவது ஆகியவற்றைக் குறித்தும் தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான நடவடிக்கைகளை மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் தயாளன் தலைமையிலான அதிகாரிகள் குழு மேற்கொண்டுள்ளது.
இத்தகைய திட்டங்கள் நடைமுறைக்கு வரும்போது நீலகிரி மாவட்டத்திலுள்ள கூட்டுறவு அமைப்புகள் அனைத்தும் புதுப்பொலிவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.