முகப்பு
கோயம்புத்தூர்

வீணாகும் அரசு மருத்துவமனை கட்டடம்!

குன்னூர், அக். 1: குன்னூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசு லாலி மருத்துவமனைக்குச் சொந்தமானக் கட்டடம் பாழடைந்த நிலையில்,சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருகிறது.   நீலகிரி மாவட்டத்தில் மிகப்பழமை வாய்ந்தது

Updated On : 27 டிசம்பர், 2023 at 5:43 PM
பகிர்:

குன்னூர், அக். 1: குன்னூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசு லாலி மருத்துவமனைக்குச் சொந்தமானக் கட்டடம் பாழடைந்த நிலையில்,சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருகிறது.

  நீலகிரி மாவட்டத்தில் மிகப்பழமை வாய்ந்தது அரசு லாலி மருத்துவமனை. நூற்றாண்டு பழமை வாய்ந்த இம்மருத்துவமனை, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவர்களின் பயன்பாட்டிற்காக மட்டும் லாலி என்ற ஆங்கிலேயரால் கட்டப்பட்டது.

  பின்னர் இம் மருத்துவமனையின் அவசியம் கருதி, அனைவரும் பயன்படுத்தும் விதமாக பொது மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டது. குன்னூர் மட்டுமல்லாது, சேலாஸ், கொலக்கம்பை, எடப்பள்ளி, கட்டபெட்டு, வெலிங்டன், அருவங்காடு, ஓட்டுப்பட்டறை உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இம்மருத்துவமனையை நம்பியுள்ளனர்.

Advertisement

  மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாகவும், புதிய நோய்களின் தீவிரம் காரணமாகவும் இம்மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இடப்பற்றாக்குறை காரணமாக பல்வேறு புதிய கட்டடங்கள் இங்கு படிப்படியாகக் கட்டப்பட்டன.

  குன்னூர் வண்ணார்போட்டை பகுதியில் கட்டப்பட்ட மிகப்பெரிய கட்டடம் இரவு நேர செவிலியர்களுக்காக ஒதுக்கப்பட்டது. இப் புதியக் கட்டடத்தில் சிறிது காலம் தங்கியிருந்த செவிலியர்கள், அருகில் பிரேதப் பரிசோதனைக் கூடம் இருப்பதால், இரவில் தங்க தயக்கமாக இருப்பதாகக் கூறி, இக் கட்டடத்தை கொஞ்சம் கொஞ்சமாக காலி செய்தனர்.

  அப்போதிருந்து இந்த இரட்டை மாடிக்குடியிருப்பு கேட்பாரற்றுக் கிடப்பதால், இதன் ஜன்னல் கதவுகள் உடைக்கப்பட்டு, உள்ளே சமூக விரோதிகளின் நடமாட்டம்  அதிகரித்துள்ளது. அங்கிருந்த மதிப்பு மிக்கப் பொருள்களும் திருடப்பட்டன.

  குன்னூர் போன்ற பகுதிகளில் பல அரசுக் கட்டடங்கள் வாடகைக்கு இயங்குவதோடு, தரமற்றும், இடப்பற்றாக்குறையாக உள்ள சூழலில், இதுபோன்ற பெரிய கட்டடங்கள் சரிவரப் பராமரிக்கப்படாமலும், பயன்படுத்தாமலும் இருப்பது வேதனைக்குரியது.

  நாளொன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளைக் கவனித்து வரும் இந்த லாலி மருத்துவமனையில், மழைக்காலங்களில் ஏற்படும் நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களின் போது நோயாளிகளுக்கு இடப்பற்றாக்குறை ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. இந்நிலையில் இந்தக் கட்டடத்தைப் புதுப்பிப்பதன் மூலம், தற்போது குடியிருப்பு இல்லாமல் வாடகைக்கு வெளியில் தங்கியுள்ள 75 சத செவிலியர்கள் மற்றும் ஆண் உதவியாளர்கள் உள்ளிட்டோருக்கு தங்கும் வசதியை ஏற்படுத்தித் தர இயலும்.

  மேலும், தனியார் இடங்களில் வாடகைக்கு இருக்கும் பல்வேறு அரசுக் கட்டடங்களையும் இங்கு மாற்ற முடியும் என்று கூறுகின்றனர் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தோர்.

  இதுபோன்ற பெரிய கட்டடங்களை வீணாக்குவதற்குப் பதிலாக, நோயாளிகளுக்கான  படுக்கை அறைகளாகவோ, மருத்துவமனைக் குடியிருப்புகளாகவோ அல்லது அரசுத் துறைகளின் பயன்பாட்டிற்காகவோ மாற்றுவதன் மூலம், கட்டடம் பாதுகாக்கப்படுவதுடன், சமூக விரோதச் செயல்களையும் கட்டுப்படுத்தலாம் என்பது பொதுமக்கள் கருத்து. நடவடிக்கை எடுக்குமா அரசு?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments