கோயம்புத்தூர்

நல்லாறு அணை திட்டம் செயல்படுத்தப்படுமா?

பொள்ளாச்சி, செப்.9: தமிழக, கேரள அரசுகளுக்கு இடையில் நதி நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம் செய்த பின்னர், கேரள அரசு ஒப்பந்ததை மறுபரிசீலனை செய்ய மறுப்பதால் தமிழகப் பகுதியில் கட்ட வேண்டிய நல்லாறு அணை இழுபறியாகவ

ஆர். வேல்முருகன்

பொள்ளாச்சி, செப்.9: தமிழக, கேரள அரசுகளுக்கு இடையில் நதி நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம் செய்த பின்னர், கேரள அரசு ஒப்பந்ததை மறுபரிசீலனை செய்ய மறுப்பதால் தமிழகப் பகுதியில் கட்ட வேண்டிய நல்லாறு அணை இழுபறியாகவே இருந்து வருகிறது.

ஒப்பந்தம் கையெழுத்து

தமிழக, கேரள அரசுகளுக்கு இடையில் பரம்பிக்குளம்- ஆழியாறு பாசனத் திட்ட ஒப்பந்தம் 1958-ல் அமலானது. ஆனால் ஒப்பந்தம் கையெழுத்தானது 1971-ல்தான்.

ஒப்பந்தம் அமலுக்கு வந்த 30 ஆண்டுகள் கழித்து, அதாவது 1988-ல் ஒப்பந்தத்தை இரு மாநில அரசுகளும் மறுபரிசீலனை செய்து அதிலுள்ள நிறை, குறைகளைத் தெரிவித்து ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள அரசு மறுப்பு

கேரளத்தில் இடைமலையாறு அணையைக் கட்டினால், தமிழகத்தில் நல்லாறு அணையைக் கட்டிக் கொள்ளலாம் என்பது ஒப்பந்தத்தின் ஓர் அம்சம். இடைமலையாறு அணை கட்டி முடிக்கப்பட்டுப் பல ஆண்டுகள் ஆகியதை கேரள அரசு ஒப்புக் கொள்கிறது. ஆனால், அணையின் பாசனப் பகுதியில் கால்வாய்ப் பகுதிகள் மட்டும் கட்டி முடிக்கப்படவில்லை என்ற காரணம் காட்டி ஒப்பந்ததைப் புதுப்பிக்கக் கேரள அரசு மறுக்கிறது. நல்லாறு அணை கட்டி முடிக்கப்பட்டால் தமிழகத்துக்குக் கூடுதல் தண்ணீர் கிடைக்கும் என்பதும் கேரளத்தின் மறுப்புக்குக் காரணம்.

தண்ணீர் சேதம் அதிகம்

அப்பர் நீராறு அணையில் இருந்து பிப்ரவரி 1-ம் தேதியில் இருந்து செப்டம்பர் வரை சுமார் 9 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும். இப்போது இந்தத் தண்ணீர் சோலையாறு, பரம்பிக்குளம் அணை வழியாகச் சர்க்கார்பதி சென்று மின்னுற்பத்திக்குப் பின்னர் கான்டூர் கால்வாய் வழியாகத் திருமூர்த்தி அணையை அடைகிறது. அப்பர் நீராறில் இருந்து திருமூர்த்தி அணை வரையுள்ள நீளம் சுமார் 175 கி.மீ.

சர்க்கார்பதியில் இருந்து திருமூர்த்தி அணை வரை செல்லும் கான்டூர் கால்வாயின் நீளம் சுமார் 50 கி.மீ. ஆனால், இதில் சேதமாகும் தண்ணீரின் அளவு சுமார் 4 டி.எம்.சி. கான்டூர் கால்வாயில் உடைப்பெடுக்கும்போதும் இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும்போதும் சேதமாகும் தண்ணீரின் அளவு மேலும் அதிகமாகும்.

நீர் சேதாரம்  குறையும்

இப் பிரச்னைகளைச் சமாளிக்க அப்பர் நீராறு அணையில் கிடைக்கும் நீரை, நல்லாறு அணையில் தேக்கி வைத்து திருமூர்த்தி அணைக்குக் கொண்டு செல்ல முடியும்.

நல்லாறு அணை கட்ட உத்தேசித்துள்ள இடத்தில் இருந்து திருமூர்த்தி அணையின் நீளம் வெறும் 18 கி.மீ. மட்டுமே. இதற்காக சுமார் 14.40 கி.மீ. நீளத்துக்குச் சுரங்கப் பாதை அமைக்க வேண்டியுள்ளது. மேல்நீராறு அணையில் இருந்து நல்லாறு அணைக்கு சுரங்கப் பாதை மூலம் விநாடிக்கு 1760 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பத் திட்டம் உள்ளது. புதிதாக அமைக்கத் திட்டமிட்ட நல்லாறு அணையின் மொத்தக் கொள்ளளவு சுமார் 7.12 டி.எம்.சி.

தமிழகத்துக்கு கிடைக்கும் நன்மைகள்

நல்லாறு அணை அமைக்கப்பட்டால் தென்மேற்குப் பருவமழைக் காலங்களில் அப்பர் நீராறு அணையில் கிடைக்கும் தண்ணீர் முழுவதையும் தமிழகம் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் கூடுதலாக 180 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். அப்பர் நீராறு அணையில் இருந்து 175 கி.மீ. தொலைவு செல்லும்போது ஏற்படும் தண்ணீர் சேதம் மிகவும் அதிகம். இதற்குப் பதிலாக 18 கி.மீ. மட்டும் சென்றால் தண்ணீர் சேதம் மிக, மிகக் குறையும்.சேதம் குறைவதால் கூடுதல் நிலப்பரப்புக்குப் பாசனத்துக்குத் தண்ணீர் தர முடியும். அல்லது இப்போதுள்ள மண்டலப் பாசனத்துக்கே கூடுதலாகத் தண்ணீர் தர முடியும். மேலும் குறித்த காலத்தில் பாசனத்துக்குத் தண்ணீர் தர முடியும்.

திட்ட மதிப்பீடு உயர்வு

நல்லாறு அணை மற்றும் சுரங்கப் பாதைப் பணிகளுக்காக மொத்தம் 911 ஹெக்டேர் நிலத்தைத் தமிழக வனத்துறையினரிடம் இருந்து அரசு கையகப்படுத்த வேண்டும்.

ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டங்களை முடித்தால்தான் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்ட ஒப்பந்தப்படி அனைத்துத் தண்ணீரையும் சேமித்து வறட்சியால் வாடும் நிலங்களுக்குத் தண்ணீர் கொடுக்க முடியும்.

கட்டுமானப் பணிகள் மற்றும் நீர் மின்திட்டங்கள் அமைக்க மொத்தமாக ரூ. 20 கோடி செலவாகும் என அன்று கணக்கிடப்பட்டது. ஆனால், தற்போது ரூ. 600 கோடியாக இந்த மதிப்பீடு உயர்ந்துள்ளது.

அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்துமா என்பதே விவசாயிகளின் நீண்டகாலக் கனவு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

SCROLL FOR NEXT