கோயம்புத்தூர்

தேர்தல் விதிமுறையால் இலவச சீருடை உற்பத்தி பாதிப்பு

திருப்பூர், ஏப். 25: தேர்தல் விதிமுறை காரணமாக பள்ளி மாணவ மாணவிகளுக்கான இலவச சீருடைகளை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வரும் கல்வியாண்டு தொடக்கத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தாட

என். தமிழ்ச்செல்வன்

திருப்பூர், ஏப். 25: தேர்தல் விதிமுறை காரணமாக பள்ளி மாணவ மாணவிகளுக்கான இலவச சீருடைகளை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வரும் கல்வியாண்டு தொடக்கத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தாடை கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச சீருடை ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அதற்காக, தமிழகத்திலுள்ள பல்வேறு கைத்தறி நெசவாளர் சங்கங்கள், விசைத்தறி சங்கங்கள் மூலம் ஆண்டுதோறும் 60 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி செய்யப்படுகிறது.

பிப்ரவரி மாதம் அரசு பிறப்பிக்கும் உத்தரவைத் தொடர்ந்து, பல்வேறு மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் அலுவலகங்கள் மூலம் டெண்டர் விடப்பட்டு, இலவச சீருடைகளுக்கு தேவையான துணிகள் உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். மார்ச் மாதத்தில் இப்பணிகள் துவங்கினால் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தேவையான சீருடைகளைத் தயாரிக்க குறைந்தபட்சம் 3 மாதங்களாகும்.

இந்நிலையில், 2011-12ம் கல்வியாண்டில் இலவச சீருடை திட்டத்தை செயல்படுத்துவதற்குத் தேவையான துணியை உற்பத்தி செய்ய தமிழக அரசு பிப்ரவரி இறுதியில் உத்தரவைப் பிறப்பித்த போதிலும், தேர்தல் விதிமுறைகள் காரணமாக டெண்டர் விடுவதில் தடை ஏற்பட்டுள்ளது.

இதனால், சீருடைத் துணியை உற்பத்தி செய்வது இதுவரை தொடங்கப்படாமல் உள்ளதால், கல்வியாண்டின் தொடக்கத்தில் மாணவர்களுக்கு இலவச சீருடைகள் வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கைத்தறி, விசைத்தறிகள் அதிகமுள்ள மாவட்டங்களாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்கள் விளங்குகின்றன. அரசு செயல்படுத்தும் இலவச சீருடைத் திட்டத்துக்குத் தேவையான துணியை உற்பத்தி செய்வதை நம்பி இம்மாவட்டங்களில் ஏராளமான கைத்தறி, விசைத்தறி சங்கங்களும், நெசவாளர்களும் உள்ளனர்.

தேர்தல் விதிமுறைகள் காரணமாக இலவச சீருடைகள் உற்பத்தி செய்ய அனுமதி கிடைக்காததால், ஆயிரக் கணக்கான கூட்டுறவு சங்கங்களும் நெசவாளர்களும் பெரும் தவிப்பில் உள்ளனர்.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் (பொறுப்பு) ராஜகோபால் கூறியது:

பள்ளி மாணவர்களுக்கான இலவச சீருடைகள் உற்பத்தி செய்வதற்கான ஆணையை கடந்த பிப்ரவரி இறுதியிலேயே அரசு பிறப்பித்துள்ளது. ஆனால், மார்ச் 1ம் தேதி முதல் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், துணி உற்பத்தி செய்ய டெண்டர் விடுவதில் தடை ஏற்பட்டது. அதனால், இதுவரை இலவச சீருடைகள் உற்பத்தி பணிகள் தொடங்கப்படவில்லை.

தற்போது, தேர்தல் விதிமுறைகளைத் தளர்த்தி ஏற்கனவே வழங்கப்பட்ட அரசாணைகளுக்கு டெண்டர் பணிகளை இறுதி செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, இலவச சீருடைக்கான துணி உற்பத்தி செய்யும் பணி விரைவில் தொடங்கப்படும். அதற்கான ஏற்பாடுகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநரகம் மேற்கொண்டு வருகிறது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT