கோயம்புத்தூர்

ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் அணைக்கட்டு: ஆய்வு செய்யுமா பேரவை மனுக்கள் குழு?

ஈரோடு, டிச. 28: ஈரோடு மாவட்டத்தில் காமராஜர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட பாசனத் திட்டம், உரிய பராமரிப்பு இல்லாததால் பாழாகிக் கிடக்கிறது. இந்த பாசனத் திட்டத்தின் அணைக்கட்டு, வாய்க்கால்களை பேரவை மனு

கே.விஜயபாஸ்கா்

ஈரோடு, டிச. 28: ஈரோடு மாவட்டத்தில் காமராஜர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட பாசனத் திட்டம், உரிய பராமரிப்பு இல்லாததால் பாழாகிக் கிடக்கிறது. இந்த பாசனத் திட்டத்தின் அணைக்கட்டு, வாய்க்கால்களை பேரவை மனுக்கள் குழு ஆய்வு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

 ÷கீழ்பவானி பாசன பிரதானக் கால்வாயிலிருந்து வரும் கசிவுநீரைச் சேகரித்து பாசனத்துக்குப் பயன்படுத்தும் வகையில், ஈரோட்டில் பெரும்பள்ளம் என்ற இடத்தில் காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில், கடந்த 1964ம் ஆண்டில் தடுப்பணை கட்டப்பட்டது. இந்தத் தடுப்பணையில் இருந்து பெரும்பள்ளம்- நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் பாசனத் திட்டம் தொடங்கப்பட்டது.

 ÷இதன் மூலம் காசிபாளையம், வெண்டிபாளையம், 46 புதூர், லக்காபுரம், முத்துக்கவுண்டம்பாளையம், சின்னியம்பாளையம் மற்றும் நஞ்சை ஊத்துக்குளி கிராமங்களைச் சேர்ந்த 2,500 ஏக்கர் நிலம் பாசன வசதிபெற்றது.

 ÷கடந்த 1990ம் ஆண்டுவரை இப்பகுதி விவசாய நிலங்களை வளம் கொழிக்கச்செய்த இந்த பாசன வாய்க்கால் கடந்த 20 ஆண்டுகளாகப் பயனற்றுக் கிடக்கிறது. அணைக்கட்டு மற்றும் பிரதான வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததாலும், வாய்க்கால்கள் தூர்வாரிப் பராமரிக்கப்படாததாலும், இந்த பாசனத் திட்டத்தால் வளம் கொழித்த விவசாய நிலங்கள் தற்போது தரிசு நிலங்களாகவும், வீட்டு மனைகளாகவும் மாறிவிட்டன.

 ÷இந்த பாசனத்திட்டத்தை சீரமைத்து மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று கடந்த 2006ம் ஆண்டில் ஈரோடு வந்த பேரவை மனுக்கள் குழுவிடம் விவசாயிகள் மனு அளித்தனர். இந்தக் குழுவின் பரிந்துரைப்படி பொதுப்பணித் துறை அதிகாரிகள் ரூ. 43.75 லட்சம் மதிப்பில் திட்ட அறிக்கை தயாரித்து கடந்த 2008ம் ஆண்டில் அரசுக்கு அனுப்பினர். ஆனால் நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் பணிகள் தொடங்கப் படவில்லை.

 ÷அணைக்கட்டின் நீர்த்தேக்கப் பகுதி 9 ஏக்கர், இதில் 3 ஏக்கர் அளவில் மட்டுமே தற்போது தண்ணீர் தேங்கியுள்ளது. கரையின் வடபுறம் முழுவதும் முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோல் 30 அடி ஆழம் கொண்ட இந்தக் கால்வாயின் பெரும்பகுதி குப்பைகளாலும், ஆலைக்கழிவுகளாலும் மூடப்பட்டுள்ளது.

 ÷இதனால் இந்த பாசனப் பகுதி நிலங்களில் 80 சதவீதம் தரிசு நிலங்களாகவும், எஞ்சியவை வீட்டு மனைகளாகவும் மாறிவிட்டன. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால், கிணறுகளும், ஆழ்குழாய்க் கிணறுகளும் வறண்டுவிட்டன.

 ÷இதுகுறித்து பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கே.என்.கைலாசம் தெரிவித்தது:

 ÷இந்த அணைக்கட்டில் உள்ள ஆக்கிரமிப்புக் குடியிருப்புகளுக்கு மாற்றுஇடம் வழங்கிவிட்டு, அணைக்கட்டின் உயரத்தை மேலும் 5 அடி உயர்த்த வேண்டும். வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வார வேண்டும்.

 ÷கீழ்பவானி பிரதான வாய்க்கால் கசிவுநீர் தான் இந்த பாசனத் திட்டத்தின் மூல ஆதாரம். இதனால் கீழ்பவானி வாய்க்கால் பராமரிப்புக்கு நிதி ஒதுக்கும்போது, இந்தப் பாசனத் திட்ட சீரமைப்புக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.

 ÷இதுகுறித்து பொதுப்பணித் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தது:

 ÷வாய்க்கால் மற்றும் நீர்த்தேக்க பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புக் குடியிருப்புகளை அகற்றும் பட்சத்தில், பாதிக்கப்படுபவர்களுக்கு மாற்றுஇடம் அளிக்கத் தயாராக இருப்பதாக வருவாய்த் துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இந்தப் பாசனத் திட்டத்தை மீண்டும் முழுமையாகச் செயல்படுத்த ரூ. 3 கோடி செலவாகும். இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

 ÷கடந்த 2006ம் ஆண்டில் பேரவை மனுக்கள் குழு இங்கு ஆய்வு செய்த பிறகே, 2008ல் அணைக்கட்டு மற்றும் வாய்க்கால்களை சீரமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. அப்போது நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், பணிகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, ஈரோடு மாவட்டத்தில் முதல்முறையாக பேரவை மனுக்கள் குழு வியாழக்கிழமை (இன்று) ஆய்வு செய்கிறது.

 ÷பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் தொகுதியில் இந்த அணைக்கட்டு உள்ளது. பாசன நிலங்கள், மொடக்குறிச்சி தொகுதி எம்எல்ஏவும், பேரவை மனுக்கள் உறுப்பினருமான ஆர்.என்.கிட்டுசாமி தொகுதியில் உள்ளன. எனவே, விவசாயிகள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

 ÷அணைக்கட்டு மற்றும் பாசன வாய்க்கால்களை மனுக்கள் குழு ஆய்வு செய்து, முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்வதன் மூலம், 7 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் வாழ்க்கை வளம்பெறும். பேரவை மனுக்கள் குழு கவனிக்குமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT