குறைந்த விலைக்கு காஸ் சிலிண்டர்: டீலர்கள் நியமிக்க கோடிக்கணக்கில் வசூல்!
திருப்பூர், ஜூலை 6: பாரத் காஸ், இண்டேன் காஸ் சிலிண்டர்களைவிட குறைந்த விலைக்கு காஸ் சிலிண்டர்கள் வழங்குவதாகத் தெரிவித்து தனியார் நிறுவனம் ஒன்று தமிழகத்தின் பல பகுதிகளிலும் டீலர்களை நியமித்து வருகிறது.
திருப்பூர், ஜூலை 6: பாரத் காஸ், இண்டேன் காஸ் சிலிண்டர்களைவிட குறைந்த விலைக்கு காஸ் சிலிண்டர்கள் வழங்குவதாகத் தெரிவித்து தனியார் நிறுவனம் ஒன்று தமிழகத்தின் பல பகுதிகளிலும் டீலர்களை நியமித்து வருகிறது.
அரசு அங்கீகாரம் பெறுவதற்கு முன்பாகவே டீலர்கள் நியமனத்துக்கு கோடிக்கணக்கில் வசூல் செய்து வருவது மக்களிடையே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு அண்மையில் சமையல் காஸ் சிலிண்டர் விலையை ரூ.50 உயர்த்தியது. தொடர்ந்து, தமிழக அரசு சமையல் காஸ் மீதான 4 சதவீத மதிப்புக்கூட்டு வரியை ரத்து செய்தது. அதனடிப்படையில், தற்போது தமிழகத்தில் பாரத் காஸ், இண்டேன் காஸ், ஹெச்பி காஸ் ஆகியவை 14.2 கிலோ சமையல் காஸ் சிலிண்டர்கள் ரூ.395.50- க்கு (அரசு மானியம் உள்பட) வினியோகிக்கிறது.
ஆனால், தனியார் நிறுவனம் ஒன்று 15 கிலோ சமையல் காஸ் சிலிண்டர் ரூ.400க்கு வழங்குவதாக தெரிவித்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் டீலர்களை நியமித்து வருகிறது.
Advertisement
தவிர, அந்நிறுவனம் சார்பில் 12 கிலோ சிலிண்டர் ரூ.300-க்கும், 17 கிலோ சிலிண்டர் ரூ.800-க்கும் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டது அந்நிறுவனம். சென்னை தி.நகர் வரதராஜ முதலி வீதியில் தலைமை அலுவலகம் செயல்படுவதாகக் கூறும் அந்நிறுவனம் தனது காஸ் நிரப்பும் மையத்தை திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள முத்தணம்பட்டியில் அமைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம் சார்பில் வழங்கப்பட உள்ள எல்பிஜி காஸில் சிறப்புமிக்க ஒரு மூலக்கூறை சேர்ப்பதால் காஸின் வீரியம் அதிகரிப்பதாகவும், அதனால் குறைந்த விலையில் காஸ் சிலிண்டர் வழங்க முடிவதாகவும் டீலர்களிடம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், இந் நிறுவனத்தில் டீலராக இணைவதற்கு சிலிண்டர் ஒன்றுக்கு சுமார் ரூ.1,650 வீதம் ஒவ்வொரு பகுதிக்கும் 1,000 சிலிண்டர்கள் வரை டெபாசிட் பெற்று வருகிறது. நாமக்கல், ராசிபுரம், சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் டீலராக இணைவதற்கு பலரும் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி வருகின்றனர். எனினும், அந்நிறுவனம் சார்பில் வழங்கப்படும் காஸ் சிலிண்டர்களுக்கு இதுவரை அரசு அங்கீகாரம் பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது.
அரசு சார்பில் 14.2 கிலோ சமையல் காஸ் ரூ.395.50க்கு வழங்கப்படுகிறது. பிற தனியார் நிறுவனங்கள் 12 கிலோ சமையல் காஸ் ரூ.748க்கும், 15 கிலோ ரூ.800க்கும், 17 கிலோ ரூ.1,420க்கும் வழங்கி வருகின்றன.
ஆனால், இந்த நிறுவனம் காஸ் 12 கிலோ ரூ.300க்கும், 15 கிலோ ரூ.400க்கும், 17 கிலோ ரூ.800க்கும் வழங்கப்போவதாகக் கூறுகிறது.
சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் கூறும் காஸ் நிரப்பும் மையம் தற்போது வேறு பெயரில் இயங்கி வருகிறது.
ஆகவே, அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் தலையிட்டு விசாரணை நடத்தி, உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.