முகப்பு
கோயம்புத்தூர்

வசதிகள் உள்ளன; மகப்பேறு மருத்துவர்கள் இல்லை!

குன்னூர், மார்ச் 3: நூற்றாண்டைக் கடந்து செயல்பட்டுவரும் குன்னூர் லாலி மருத்துவமனையில் நிரந்தர மகப்பேறு மருத்துவர்கள் இல்லாததால் கர்ப்பிணிப் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தி

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:42 PM
பகிர்:

குன்னூர், மார்ச் 3: நூற்றாண்டைக் கடந்து செயல்பட்டுவரும் குன்னூர் லாலி மருத்துவமனையில் நிரந்தர மகப்பேறு மருத்துவர்கள் இல்லாததால் கர்ப்பிணிப் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறந்த அரசு மருத்துவமனைகளில் குன்னூர் அரசு லாலி மருத்துவமனைக்குச் சிறப்பிடம் உண்டு. மருத்துவமனைக்கு நூறாண்டு கால வரலாறுண்டு. இவ்வளவு சிறப்புப் பெற்ற இம்மருத்துவமனையில் மகப்பேறுப் பிரிவுக்கு நிரந்தர மருத்துவர்கள் இல்லாமல் இருப்பதால் சிக்கலான பிரசவத்துக்கு வரும் ஏழை கர்ப்பிணிப் பெண்கள் கோவை மற்றும் உதகை மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகின்றனர். இதனால், பலரும் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

இம்மருத்துவமனையில் பேறு காலத்திற்குத் தேவைப்படும் ஸ்கேன், மருந்து மாத்திரைகள், இடவசதி, அறுவைச்சிகிச்சை அரங்கு என அனைத்து வசதிகளும் உள்ளன. ஆனால், மகப்பேறு பிரிவுக்காக நியமிக்கப்பட்ட இரு மருத்துவப் பணியிடங்கள் காலியாக நிரப்பப்படாமல் உள்ளது.

Advertisement

அவ்வப்போது இந்தப் பணிக்கு வரும் மருத்துவர்களும் சொந்தக் காரணங்களால் இங்கு பணிசெய்ய விரும்பாமல் வேறு இடத்திற்ரு மாற்றலாகிச் சென்று விடுகின்றனர்.

மாதமொன்றுக்குச் சராசரியாக 25 முதல் 30 கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக இங்கு வந்து செல்கின்றனர். மேலும் 10 முதல் 15 பேருக்கு அறுவைச்சிகிச்சை மூலமாகக் குழந்தை பிறக்கிறது. சிக்கலான பிரச்னை ஏற்படும் 5 பேர் கோவை மற்றும் உதகைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

108 ஆம்புலன்ஸ் சேவை உள்ளூரில் இருந்தாலும் வெளியூர்களுக்கு இயக்க உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக கர்ப்பிணிகளுக்கு ஆம்புலன்ஸ் உதவி கிடைப்பதில்லை.

பொது மக்களின் நலன் கருதி காலியாக உள்ள 2 மகப்பேறு மருத்துவப் பணிக்கு உள்ளூர் மருத்துவர்களை நியமித்தால் ஆபத்து காலத்தில் மிகுந்த உதவியாக இருக்கும் என்கின்றனர் பல தன்னார்வ அமைப்புகள்.

நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த லாலி மருத்துவமனையின் மீது அரசு கவனம் செலுத்தி இப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments