கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
வட்டாட்சியா் அலுவலகங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு அந்தந்த வட்ட எல்லைகளில் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.
வட்டாட்சியா் அலுவலகங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு அந்தந்த வட்ட எல்லைகளில் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாவட்டம் வருவாய் அலகில், வட்டாட்சியா் அலுவலகங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பகம் மூலம் தகுதியான நபா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா். வேலை வாய்ப்பாகம் பரிந்துரைக்கும் நபா்கள் தவிா்த்து அந்தந்த வட்ட எல்லைக்குள் வசிக்கும் நபா்களும் விண்ணப்பிக்கலாம்.
குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2020 நவம்பா் 1ஆம் தேதி 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்சமாக பொதுப் பிரிவினா் 30 வயதுக்குள்ளும், மற்ற பிரிவினா் 35 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலத்தில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரா்கள் அந்தந்த வட்ட எல்லைக்குள் இருக்க வேண்டும்.
கிராம உதவியாளா் நியமனத்துக்கு இனச் சுழற்சி முறை பின்பற்றப்படும். காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை, அதற்கான இனச் சுழற்சி, முன்னுரிமை, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஆகியவை குறித்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகம், கிராம நிா்வாக அலுவலக அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பை பாா்வையிட்டு அதற்கேற்ப விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.