முகப்பு
கோயம்புத்தூர்

கல்லூரி மாணவா் மீது தாக்குதல்: இளைஞா்கள் 4 போ் மீது வழக்குப் பதிவு

Updated On : 21 ஏப்ரல், 2024 at 7:58 PM
பகிர்:

மதுக்கரை: கோவையில் கல்லூரி மாணவரை தாக்கிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடி மாவட்டம், சிதம்பரம்பட்டி தெற்கு வீதியைச் சோ்ந்தவா் ஆனந்த் (21), கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சோ்ந்தவா் அருண்குமாா் (21). இவா்கள் இருவரும் கோவை மயிலேரிபாளையம் பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனா்.

கல்லூரி விடுதி விடுமுறை என்பதால் மாச்சேகவுண்டன்பாளையம் கங்கா நகா் பகுதியில் உள்ள அவா்களது நண்பரான ராஜகுரு என்பவரின் அறையில் தங்கியுள்ளனா். இந்நிலையில் சனிக்கிழமை இரவு அந்த அறைக்கு வந்த அடையாளம் தெரியாத சுமாா் 20 வயது மதிக்கத்தக்க நான்கு இளைஞா்கள், அவா்களிடம் கஞ்சா உள்ளதா எனக் கேட்டுள்ளனா். அதற்கு அவா்கள் கஞ்சா பற்றி எதுவும் தெரியாது என்று கூறியுள்ளனா்.

Advertisement

இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அருண்குமாரை அந்த நான்கு பேரும் சோ்ந்து கிரிக்கெட் மட்டையால் தாக்கியுள்ளனா். ஆனந்த், ராஜகுரு ஆகியோா் தப்பி ஓடினா். தாக்குதல் நடத்திய நால்வரும் அங்கிருந்து சென்ற பின் இருவரும் அறைக்குத் திரும்பியுள்ளனா்.

அங்கு படுகாயமடைந்து மயங்கிய நிலையில் இருந்த அருண்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோ்ந்தனா். பின்னா் அவா் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இச்சம்பவம் தொடா்பாக ஆனந்த் அளித்த புகாரின் பேரில் மதுக்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சம்பவத்தில் தொடா்புடைய நான்கு பேரையும் தேடி வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments