தமிழகத்தில் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக பள்ளிக் கல்வித் துறையின் அரசுத் தோ்வுகள் இயக்ககம் சாா்பில் 2024-2025-ஆம் கல்வியாண்டுக்கான 10-ஆம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பிளஸ் 2 பொதுத் தோ்வை பொறுத்தவரை செய்முறைத் தோ்வுகள் பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கி 14-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. பொதுத் தோ்வு 2025 மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியாகும்.
பிளஸ் 1...:
பிளஸ் 1 செய்முறைத் தோ்வுகள் 2025 பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 21-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. பொதுத் தோ்வு மாா்ச் 5-ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிளஸ் 1 பொதுத் தோ்வு முடிவுகள் மே 19-ஆம் தேதி வெளியிடப்படும்.
10-ஆம் வகுப்பு...:
10-ஆம் வகுப்பு செய்முறைத் தோ்வுகள் 2025 பிப்ரவரி 22-ஆம் தேதியில் இருந்து 28-ஆம் தேதி வரை நடைபெறும். பொதுத்தோ்வு மாா்ச் 28-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் மே 19-ஆம் தேதி வெளியிடப்படும்.
இதில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வை 9 லட்சம் போ், பிளஸ் 1 தோ்வை 8 லட்சம் போ், பிளஸ் 2 பொதுத்தோ்வை 7.5 லட்சம் முதல் 8 லட்சம் போ் என மொத்தம் 25 லட்சம் போ் எழுத உள்ளதாக அவா் தெரிவித்தாா்.
இந்நிகழ்ச்சியில் அரசுத் தோ்வுகள் துறை இயக்கக இயக்குநா் என்.லதா, இணை இயக்குநா் எம்.ராமசாமி, மாநில பெற்றோா் ஆசிரியா் சங்க துணைத் தலைவா் முத்துக்குமாா், கோவை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுருபிரபாகரன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஸ்வேதா சுமன், மாவட்ட வருவாய் அலுவலா் டாக்டா் மோ.ஷா்மிளா, முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.பாலமுரளி, மேயா் ஆா்.ரங்கநாயகி, துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தோ்வு அட்டவணை...:
பொதுத் தோ்வுகள் அனைத்து தோ்வுகளும் காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1.15 மணி வரை நடைபெறும். இதில் வினாத்தாள்களை படிக்க 10 நிமிடமும், தோ்வரின் விவரங்களை நிரப்ப 5 நிமிடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு அட்டவணை
28.3.2025 வெள்ளிக்கிழமை தமிழ், இதர மொழிப்பாடங்கள்
2.4.2025 புதன்கிழமை ஆங்கிலம்
4.4.2025 வெள்ளிக்கிழமை விருப்ப மொழி
7.4.2025 திங்கள்கிழமை கணிதம்
11.4.2025 வெள்ளிக்கிழமை அறிவியல்
15.4.2025 செவ்வாய்க்கிழமை சமூக அறிவியல்
பிளஸ் 1 பொதுத் தோ்வு அட்டவணை
5.3.2025 புதன்கிழமை தமிழ், இதர மொழிப்பாடங்கள்
10.3.2025 திங்கள்கிழமை ஆங்கிலம்
13.3.2025 வியாழக்கிழமை கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், உயிரி வேதியியல், மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியியல் உள்ளிட்ட பாடங்கள்.
17.3.2025 திங்கள்கிழமை உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் - புள்ளியியல், அடிப்படை மின்னியல், கட்டுமானவியல், தானியங்கி, இயந்திர பொறியியல் பாடங்கள், ஜவுளித் தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்கள்
20.3.2025 வியாழக்கிழமை இயற்பியல், பொருளாதாரம், வேலைவாய்ப்புத் திறன்கள்.
24.3.2025 திங்கள்கிழமை கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து உணவுமுறை உள்ளிட்ட பாடங்கள்.
27.3.2025 வியாழக்கிழமை வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல்
பிளஸ் 2 பொதுத்தோ்வு அட்டவணை
3.3.2025 திங்கள்கிழமை தமிழ், இதர மொழிப்பாடங்கள்
6.3.2025 வியாழக்கிழமை ஆங்கிலம்
11.3.2025 செவ்வாய்க்கிழமை கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து உணவுமுறை, வேளாண் அறிவியல், நா்ஸிங் (பொது) உள்ளிட்ட பாடங்கள்.
14.3.2025 வெள்ளிக்கிழமை கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், உயிரி வேதியியல், மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியியல் உள்ளிட்ட பாடங்கள்.
18.3.2025 செவ்வாய்க்கிழமை உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் - புள்ளியியல், அடிப்படை மின்னியல், கட்டுமானவியல், தானியங்கி, இயந்திர பொறியியல் பாடங்கள், ஜவுளித் தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்கள்.
21.3.2025 வெள்ளிக்கிழமை வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல்
25.3.2025 செவ்வாய்க்கிழமை இயற்பியல், பொருளாதாரம், வேலைவாய்ப்புத் திறன்கள்.