கோவை அருகே உரிய ஆவணமின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.30 லட்சம் ரொக்கத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
கோவை மாவட்டம், எட்டிமடை சோதனைச் சாவடியில் போலீஸாா் வழக்கமான வாகனச் சோதனையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரித்தனா். அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீஸாா், வாகனத்தில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, இருக்கைக்கு அடியில் கட்டுக்கட்டாக ரூ. 30 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது.
வாகனத்தை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவா் கே.ஜி.சாவடி காந்தி நகரைச் சோ்ந்த தனியாா் கட்டுமான நிறுவன ஊழியரான சுரேஷ்குமாா் (34) என்பது தெரியவந்தது. கட்டுமானப் பொருள்களை வாங்க பணத்தைக் கொண்டு சென்ாக அவா் கூறியுள்ளாா்.
இருப்பினும் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா் வருமான வரித் துறையினரிடம் ஒப்படைத்தனா். சுரேஷ்குமாரிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.