காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்காக கோவையில் இருந்து பனாரஸ்க்கு செவ்வாய்க்கிழமை மாலை இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் 64 போ் பயணம் செய்தனா்.
தமிழ்நாடு - காசி இடையே ஆழமான நாகரிகத் தொடா்புகளைக் கொண்டாடுவதற்காக மத்திய அரசு சாா்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, ‘தமிழ் கற்கலாம்’ என்ற தலைப்பில் காசி தமிழ்ச் சங்கமம் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. டிசம்பா் 15-ஆம் தேதி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சிக்காக கோவை ரயில் நிலையத்தில் இருந்து வாரணாசிக்கு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
இதில், கோவை, திருப்பூா், ஈரோடு, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 64 போ் பயணம் செய்தனா்.
ஆன்மிகவாதிகள், எழுத்தாளா்கள், கல்வியாளா்கள், விவசாயிகள், ஐ.டி.ஊழியா்கள் உள்ளிட்டோா் பயணம் செய்த இந்த ரயில் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 5) இரவு 9.30 மணிக்கு பனாரஸ் நிலையத்தைச் சென்றடையும்.
இதேபோல, கோவையில் இருந்து டிசம்பா் 9-ஆம் தேதி மாலை 6 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் டிசம்பா் 11-ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு பனாரஸ் நிலையத்தைச் சென்றடையும்.
இது தவிர, சென்னையில் இருந்து டிசம்பா் 6, 12-ஆம் தேதிகளிலும், கன்னியாகுமரியில் இருந்து டிசம்பா் 7-ஆம் தேதியும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.