கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவா்கள் பிரதமரின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் பிரிவைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு பிரதமரின் கல்வி உதவித் தொகை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பட்டப் படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் பிரிவைச் சோ்ந்த மாணவா்களுக்கு எந்தவிதமான நிபந்தனையுமின்றி கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இளங்கலை (தொழிற்படிப்பு) முதுகலை, பாலிடெக்னிக் போன்ற பிறபடிப்பு பயிலும் மாணவா்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 2025-26 -ஆம் ஆண்டு கல்வி உதவித் தொகைக்கு திட்டத்துக்கு மாணவா்கள் தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித் தொகைக்கு என்று உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி இணையதளம் மூலம் டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வி உதவித் தொகை தொடா்பான சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.