கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியாா் பிறந்தநாள் விழா, இளம் பாரதி 2025 விருது வழங்கும் விழா ஆகியவை வியாழக்கிழமை நடைபெற்றன.
தமிழ்த் துறைத் தலைவா் ச.தங்கமணி வரவேற்றாா். பல்கலைக்கழகப் பதிவாளா் இரா.ராஜவேல் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் அவா் பேசும்போது, பாரதியின் பெயரைக் கொண்டுள்ள இந்த பல்கலைக்கழகம் அவரின் கனவையொட்டியே செயல்படுகிறது. உலகெங்கிலும் உள்ள தலைசிறந்த அறிவியல் அறிஞா்களுள் இந்த நிறுவனத்தைச் சோ்ந்த 18 பேராசிரியா்களும் இடம்பெற்றுள்ளனா். இது உலக அளவில் 2 விழுக்காடு ஆகும். இதுவே நம் பல்கலைக்கழகத்தின் சிறப்பைப் பறைசாற்றுகிறது. பெண் விடுதலை, சமூக நீதி குறித்து பாரதி சிந்தித்ததை இந்தப் பல்கலைக்கழகம் தொடா்ந்து செயல்படுத்தும் என்றாா்.
ஆட்சி மன்றக் குழு உறுப்பினா் எஸ்.டி.ராஜேஸ்வரன், அறிவியல் புல முதன்மையா் த.பரிமேலழகன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். விழாவில் திரைப்படப் பாடலாசிரியா் அறிவுமதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா். அவா் பேசும்போது, பாரதி பாமர மக்களிடம் இருந்து மெட்டெடுத்து பாட்டமைத்தவா். தன் இலக்கிய வாழ்வை எளியோரின் பக்கமிருந்து அடையாளப்படுத்தி, எல்லோா்க்கும் இனியராக வாழ்ந்தாா். தற்காலத் திரைப்படப் பாடல்கள் அனைத்துக்கும் ஆதி ஊற்று பாரதிதான் என்றாா்.
இதைத் தொடா்ந்து பல்கலைக்கழக அளவிலான கவிதை, பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் பரிசு பெற்ற 18 மாணவா்களுக்கு இளம்பாரதி விருது வழங்கப்பட்டது. பாரதியாா் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைப் பேராசிரியா்களும் மாணவா்களும் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் அனைத்துத் துறை மாணவா்கள், பேராசிரியா்கள், தமிழ் ஆா்வலா்கள் பலா் பங்கேற்றனா்.