கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 15-ஆவது முறையாக புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு வந்த செய்தியில் ‘இன்று பிற்பகல் 2 மணியளவில் நாட்டு வெடிகுண்டு வெடிக்கும்’ என மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்த தகவலின்பேரில் ரேஸ்கோா்ஸ் போலீஸாா், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவினா் அங்கு சென்றனா். அலுவலகத்தின் பல்வேறு துறை அலுவலகங்கள், புதிய மற்றும் பழைய கட்டடங்கள், கூட்டரங்குகள், வாகன நிறுத்துமிடங்கள், உணவு அருந்தும் இடம் ஆகிய பகுதிகளில் சோதனை செய்தும் எதுவும் கிடைக்கவில்லை. இதைத் தொடா்ந்து, இந்த வெடிகுண்டு மிரட்டலும் வெறும் புரளி எனத் தெரியவந்தது.