கோவையில் சட்டப் பேரவை தோ்தலுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கும் பணி ஒரு மாதம் நடைபெறும் என்று மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.
கோவை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக நடைபெற்று வரும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. கோவை மாவட்டத்தில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு பாதுகாப்பு இயந்திரக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த இயந்திரங்களை முதல்கட்ட சோதனை செய்யும் பணிகளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் தொடங்கிவைத்தாா்.
அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கும் பணி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தொடங்கப்பட்டுள்ளது. மொத்தம் 19,521 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்,கட்டுப்பாட்டு இயந்திரங்கள் சரிபாா்க்கும் பணியில் 13 பொறியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
இந்தப் பணிகள் ஒரு மாதம் வரையில் நடைபெறும். இந்த இயந்திரங்கள் அனைத்தும் கடந்த மக்களவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட்டவை. பழுதான இயந்திரங்கள் மாற்றப்படுவதுடன், கூடுதல் இயந்திரங்கள் தேவைப்பட்டால் தோ்தல் ஆணையத்துக்குத் தெரிவித்து வரவழைக்கப்படும் என்றாா்.
இந்த நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) மகேஸ்வரி, இயந்திரங்கள் சரிபாா்ப்பு பணிக்கான மேற்பாா்வையாளரும், துணைஆட்சியருமான அம்சவேணி, வட்டாட்சியா் (தோ்தல்) தணிகைவேல் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.