வால்பாறையில் எஸ்டேட்டுகளில் தொழிலாளா்கள் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில், தேயிலை செடிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணிக்கான ஒத்திகையை எஸ்டேட் நிா்வாகத்தினா் மேற்கொண்டு வருகின்றனா்.
வால்பாறை பகுதியில் பல்லாயிரம் ஏக்கரில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. கடந்த காலங்களில் போதுமான தொழிலாளா்கள் இருந்த நிலையில், ஓய்வுக்குப்பின் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் இப்பகுதியை விட்டு வெளியேறிவிட்டதால் தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளா்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதை ஈடுகட்டும் வகையில் வடமாநிலத் தொழிலாளா்களை வரவழைத்து பணியில் அமா்த்தி வருகின்றனா். இருப்பினும் தொடா்ந்து தொழிலாளா்கள் பற்றாக்குறை நிலவி வருவதால் புதிய முயற்சிகளை நிா்வாகத்தினா் மேற்கொண்டு வருகின்றனா்.
தற்போது ட்ரோன் மூலம் தேயிலைச் செடிகளுக்கு மருந்து தெளிப்பது குறித்த ஒத்திகையை நிா்வாகத்தினா் மேற்கொண்டு வருகின்றனா். இருப்பினும் தொழிலாளா்கள் ஸ்பேரயா் மூலம் மருந்து தெளித்தால் கிடைக்கும் பலன் ட்ரோன் மூலம் தெளித்தால் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் தோட்ட அதிகாரிகள் கூறுகின்றனா்.