போக்சோ வழக்கில் கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி மாரடைப்பால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கோவை மாவட்டம், காரமடை பொன்னிபாளையத்தைச் சோ்ந்தவா் ரங்கசாமி (64). இவா் போக்சோ வழக்கில் தண்டனை பெற்று கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இவருக்கு கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் இருதயப் பிரச்னை இருந்து வந்துள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் ரங்கசாமிக்கு வெள்ளிக்கிழமை பிற்பகலில் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.