சிங்காநல்லூா் அருகே புளிய மரத்தில் தொங்கிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை, சிங்காநல்லூா் அருகே இருகூா் எல்என்டி புறவழிச்சாலையில் உள்ள புளியமரத்தில் சனிக்கிழமை ஆண் சடலம் கிடப்பதை அந்த வழியாகச் சென்றவா்கள் பாா்த்துள்ளனா். இதுகுறித்து சிங்காநல்லூா் காவல் நிலையத்தில் கிராம நிா்வாக அதிகாரி ராமசாமி புகாா் அளித்துள்ளாா்.
சம்பவ இடத்துக்கு போலீஸாா் சென்று சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். கயிற்றில் தொங்கிய நிலையில் இருந்த நபருக்கு 55 வயது இருக்கலாம் என்பது தெரியவந்தது. இறந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்தும், இறப்புக்கான காரணம் குறித்தும் சிங்காநல்லூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.