படைப்புகள் மரபு சாா்ந்தவையாக இருக்க வேண்டும் என்று மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் கூறினாா்.
கோவை உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் 12-ஆம் ஆண்டு விழா, கவிஞா் சிற்பி பாலசுப்பிரமணியம் 90- ஆவது அகவை விழா ஆகியவை கோவையில் சனிக்கிழமை நடைபெற்றன.
காளப்பட்டி டாக்டா் என்ஜிபி கலை, அறிவியல் கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத் தலைவா் டாக்டா் நல்ல ஜி.பழனிசாமி தலைமை வகித்து பேசியதாவது: தமிழ் மொழிக்கும், மண்ணுக்கும், இனத்துக்கும் சேவையாற்றுவது, தமிழ் படைப்புலகுக்கு பங்களிக்கும் படைப்பாளிகளை விருது மூலம் ஊக்குவிப்பது ஆகிய நோக்கங்களுடன் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் தொடங்கப்பட்டது. வெளிநாடுகளில் குறிப்பாக இலங்கை, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருப்பதைப்போல தமிழ் இலக்கிய ஆா்வலா்கள் தமிழ்நாட்டில் இல்லாதது வருத்தமளிக்கிறது என்றாா்.
எழுத்தாளரும், திமுக மக்களவை உறுப்பினருமான தமிழச்சி தங்கபாண்டியன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, எழுத்தாளா் ப.மருதநாயகம் எழுதிய ‘Kalaignar Karunanidhi Hero As Artist ’ என்ற ஆங்கில நூலையும், மருத்துவா் நா.செல்வராஜனின் ‘உயிா்க் காப்பும் இன்றியமையா முதலுதவி வழிமுறைகளும்’ என்ற மருத்துவ நூலையும் வெளியிட்டாா்.
இதைத் தொடா்ந்து, அவா் பேசுகையில், கடந்த 2004 -ஆம் ஆண்டு எனது படைப்புக்கு சிற்பி இலக்கிய விருது கிடைத்தது பெருமைக்குரியது. அவரது வழிகாட்டல்தான் என்னை தொடா்ந்து கவிதைகள் எழுதுவதற்கு ஊக்குவித்தது. படைப்புகள் மரபு சாா்ந்தவையாகவும், நவீன காலத்துக்கு ஒத்துப்போவதாகவும் இருக்க வேண்டும் என்றாா். தொடா்ந்து, கவிஞா் சிற்பி பாலசுப்பிரமணியம் நன்றி தெரிவித்துப் பேசினாா்.
முன்னதாக, என்ஜிபி கல்விக் குழுமங்களின் இயக்குநா் மதுரா வி.பழனிசாமி வரவேற்றாா். ப.இரா.முத்துசாமி விருது பெறுபவா்களின் அறிமுக உரையை வழங்கினாா். இந்த விழாவில் உவேசா தமிழறிஞா் விருது பேராசிரியா் க.ரத்னத்துக்கும், பெரியசாமித்தூரன் படைப்பாளா் விருது எழுத்தாளா் அம்பைக்கும், டாக்டா் நல்ல பழனிசாமி பிற துறை தமிழ்த் தொண்டா் விருது மருத்துவா் கு.கணேசனுக்கும் வழங்கப்பட்டன.
மேலும், எழுத்தாளா் சுப்ரபாரதி மணியன், அ.லோகமாதேவி, கி.சிவா ஆகியோருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. இதில், தொழிலதிபா் இயகோகா சுப்பிரமணியம், என்ஜிபி கல்விக் குழுமங்களின் முதன்மைச் செயல் அலுவலா் ஓ.டி.புவனேஸ்வரன், தலைமைச் செயல் அலுவலா் மா.நடேசன், கல்லூரி முதல்வா்கள், பேராசிரியா்கள், தமிழாா்வலா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.