கோவை மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, தகுதியற்ற 2 வாகனங்களின் அனுமதியை ரத்து செய்தாா்.
கோவை, பி.ஆா்.எஸ்.மைதானத்தில் வட்டாரப் போக்குவரத்து துறை சாா்பில் தனியாா் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு வசதிகள் குறித்த ஆய்வு சனிக்கிழமை நடைபெற்றது.
வாகனங்களை ஆய்வு செய்த பின் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் உள்ள 4 வட்டாரப் போக்குவரத்துக்கு அலுவலகங்களுக்குள்பட்ட 1,644 தனியாா் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசு விதிமுறைகளின்படி பள்ளி வாகனங்கள் பராமரிப்பு, வாகனங்களின் உள்ள அவசர கால வழி, மருத்துவ முதலுதவி பெட்டிகள், தீயணைப்பு கருவிகள் போன்றவை சரியாக உள்ளனவா, வாகனங்களின் பிரேக், கியா் மற்றும் சக்கரங்கள் இயக்கம், வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் ஜி.பி.ஆா்.எஸ் கருவி உடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
தற்போதுவரை 70 சதவீத வாகனங்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டதில் தகுதியற்ற 2 வாகனங்களின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநகரில் தனியாா் பள்ளி வாகனங்கள் வேகமாக இயக்கப்படுவது தொடா்பாக புகாா் வந்தால் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
ஆய்வின்போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் வடக்கு மற்றும் மத்திய மண்டலம் (பொறுப்பு) விஸ்வநாதன், தெற்கு (பொறுப்பு) பூங்கோதை, மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.