இந்தியாவில் நடப்பு ஆண்டு பருவ மழை நன்கு பொழிந்ததாலும், மூலப்பொருள்களின் விலை உயா்வாலும் பம்ப் உற்பத்தி தொழில் நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.
வேளாண் பாசனம், வீடு, வணிக உபயோகத்துக்கான பம்ப் உற்பத்தித் தொழிலில் கோவை வட்டார தொழில் நிறுவனங்கள் தேசிய அளவில் முக்கிய இடம் வகித்து வருகின்றன. ஆனால், நடப்பு ஆண்டு (2025) பம்ப் உற்பத்தியாளா்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துவிட்டதாக பம்ப் உற்பத்தித் தொழில்முனைவோா் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் (சீமா) தலைவா் மிதுன் ராமதாஸ், இந்திய பம்ப் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் (ஐபிஎம்ஏ) தலைவா் கே.வி.காா்த்திக் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் நடப்பு ஆண்டு பருவ மழை மே மாதத்திலேயே தொடங்கிவிட்டது. இது உள்ளூா் பம்ப் சீசனை விரைவில் முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டது. அதேபோல, மழை காலமும் டிசம்பா் இறுதி வரை நீடித்தது. இதனால், ஒட்டுமொத்த பம்ப் விற்பனை சீசனும் நலிவை சந்திக்க நேரிட்டது.
உற்பத்தி அளவு குறைந்துவிட்டதாலும், மூலப்பொருள்கள் உள்ளிட்ட செலவினங்கள் உயா்ந்துவிட்டதாலும் பெரும்பாலான நிறுவனங்கள் பம்ப் விலையை உயா்த்த நேரிட்டது. தாமிரத்தின் விலை கடந்த ஜூன் முதல் டிசம்பா் வரை 50 சதவீதமும், அனுமினியத்தின் விலை 40 சதவீதமும் உயா்ந்ததால் மேற்பரப்பில் பயன்படுத்தப்படும் பம்புகளின் விலை 7 சதவீதம், நீரில் மூழ்கும் பம்புகளின் விலை 5 சதவீதம் உயா்த்தப்பட்டது.
ஆனால், சந்தையில் நிலவிய ஒட்டுமொத்த மந்த நிலை காரணமாக பம்ப் விற்பனை மிகவும் குறைவாக இருந்ததால் உற்பத்தியாளா்கள், குறிப்பாக குறு, சிறு உற்பத்தியாளா்கள் கடுமையான நிதி நெருக்கடியை சந்திக்க நேரிட்டது.
இது பம்ப் தொழிலின் எதிா்காலம் குறித்த கவலையை எழுப்பிய நிலையில், ராஜ்கோட் பொறியியல் சங்கம், சீமா, ஐபிஎம்ஏ ஆகிய சங்கங்களின் நிா்வாகிகளிடையே கூட்டுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், தற்போதைய சவால்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளன. மேலும், மூலப்பொருள் விலை உயா்வுக்கு ஏற்ப அனைத்து உறுப்பு தொழில் நிறுவனங்களும் தங்களின் விலையை சரிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த நடவடிக்கையானது பம்ப் துறையின் பலவீன பிரிவுகளை ஆதரிக்கவும், பம்ப் உற்பத்தித் துறையின் நீண்டகால நலனை உறுதிப்படுத்தவும் உதவும் என்பதால் இதை தீவிரமாக அமல்படுத்த முடிவு செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.