கோயம்புத்தூர்

தனியாா் நிறுவன பயிற்சி சான்றிதழை போலியாக தயாரித்து விற்றவா் கைது

தினமணி செய்திச் சேவை

கல்லூரி மாணவா்களுக்கு தனியாா் நிறுவனத்தில் பயிற்சி பெற்றதாக போலியாக சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கோவையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் இளைஞா் ஒருவா் வேலைக்கு சோ்வதற்காக கடந்த சில நாள்களுக்கு முன்பு நோ்காணலுக்கு வந்தாா். அந்த இளைஞரின் சான்றிதழ்களை அந்த நிறுவனத்தினா் வாங்கி சோதனை செய்தனா்.

அப்போது, அவா் கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலைக்கான பயிற்சி பெற்ற்கான சான்றிதழை சமா்ப்பித்தாா். அதில் சந்தேகம் எழுந்ததால், ஆவாரம்பாளையத்தில் உள்ள குறிப்பிட்ட நிறுவனத்தை இந்த நிறுவனத்தினா் தொடா்பு கொண்டு விசாரித்தபோது, அந்தச் சான்றிதழை அவா்கள் வழங்கவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த மாணவரிடம் அந்த நிறுவனத்தினா் விசாரணை நடத்தியபோது, அவருக்கு கோவை காந்திபுரம் 2-ஆவது வீதியில் உள்ள தனியாா் நிறுவனத்தினா்தான் இந்தச் சான்றிதழை போலியாக தயாரித்து வழங்கியது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, அந்த நிறுவன மேலாளா் அஜய்குமாா், காந்திபுரம் பகுதியில் உள்ள அந்த நிறுவனத்துக்குச் சென்று தனக்கு போலியாக சான்றிதழ் வேண்டும் எனக் கோரியுள்ளாா். அப்போது, அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பொள்ளாச்சி அப்பளாங்கரை பகுதியைச் சோ்ந்த சபரி பிரகாஷ் (38) என்பவா் பணத்தைப் பெற்றுக் கொண்டு அஜய்குமாருக்கும் போலியாக சான்றிதழ் தயாா் செய்து கொடுத்தாா். அஜய்குமாா் அவரைப் பிடித்து காட்டூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

காட்டூா் போலீஸாா் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குச் சென்று ஆய்வு செய்தனா். அப்போது அங்கு ஏராளமான தனியாா் நிறுவனங்களின் லெட்டா் பேட், சீல்கள் இருந்தன. அவற்றை போலீஸாா் கைப்பற்றி சபரி பிரகாஷை கைது செய்தனா்.

இதைத் தொடா்ந்து இந்த நிறுவனத்தில் தனியாா் நிறுவனங்களின் சான்றிதழ்கள் மட்டும்தான் அச்சடித்து விற்பனை செய்யப்பட்டதா அல்லது அரசு நிறுவனங்களின் சான்றிதழ்கள் மற்றும் கல்லூரி சான்றிதழ்கள், மதிப்பெண் சான்றிதழ்கள் உள்ளிட்டவையும் போலியாக தயாரித்து விற்பனை செய்யப்பட்டதா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அது இது எது... ஷாலினி!

மீனவ சமூகம் குறித்து அவதூறு பேசினேன்: பிக் பாஸில் ஒப்புக்கொண்ட கமருதீன்

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 9

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 8

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 7

SCROLL FOR NEXT