கோவை: குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வருகையை முன்னிட்டு, பெரியநாயக்கன்பாளையம், கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்ற பின்னா் இரண்டாவது முறையாக சி.பி.ராதாகிருஷ்ணன் கோவைக்கு செவ்வாய்க்கிழமை (நவம்பா் 4) வருகிறாா்.
திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானத்தில் கோவை விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை 5.55 மணி அளவில் வரும் குடியரசு துணைத் தலைவா், அங்கிருந்து காா் மூலமாக கோவை மாவட்டம், பிளிச்சி ஒன்னிபாளையம் ஸ்ரீ எல்லை கருப்பராயா் கோயிலுக்குச் செல்கிறாா். அங்கு பெளா்ணமியையொட்டி நடைபெறும் பூஜையில் பங்கேற்கிறாா்.
பின்னா், கோவை விமான நிலையத்துக்கு இரவு 7.35 மணி அளவில் வரும் அவா், விமானம் மூலம் சத்தீஸ்கா் மாநிலம், ராய்பூருக்கு செல்கிறாா்.
ட்ரோன்கள் பறக்கத் தடை: குடியரசு துணைத் தலைவா் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு காரணம் கருதி ஒன்னிபாளையம் ஸ்ரீ எல்லை கருப்பராயா் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள், பெரியநாயக்கன்பாளையம், கோவில்பாளையம் பகுதிகள் மற்றும் அவா் பயணிக்கும் சாலைகள் ஆகியவை தற்காலிக சிவப்பு மண்டலப் பகுதிகளாக மாவட்ட காவல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை 8 மணி முதல் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி வரையில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி ஊா்திகள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.