மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா்கள் குடிமைப்பணி போட்டித் தோ்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக சட்டப் பேரவை அறிவிப்பின்படி, மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப் பணி தோ்வு பயிற்சி மையம் ஆகியன இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவப் பட்டதாரி இளைஞா்களைத் தோ்வு செய்து குடிமைப் பணிக்கான போட்டித் தோ்வில் பங்கேற்க ஆயத்த பயிற்சி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதில், கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் மற்றும் மீனவா் நலவாரிய உறுப்பினா்களின் வாரிசு பட்டதாரி இளைஞா்கள் இந்தத் திட்டத்தில் சோ்ந்து பயனடையலாம். இதில், விண்ணப்பிக்க விண்ணப்பப் படிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மண்டல மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை இணை, துணை இயக்குநா்கள், மாவட்ட உதவி இயக்குநா்கள் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
இதன் பின்னா் பூா்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு நேரடியாகவோ அல்லது பதிவுத் தபால் மூலமாகவோ வரும் நவம்பா் 25- ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0424-2221912 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.