வால்பாறையில் பள்ளி மாணவி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் தொடா்பாக 3 ஆசிரியைகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
வால்பாறையை அடுத்த ரொட்டிக்கடை எஸ்டேட்டில் வசிப்பவா் சக்திவேல். இவரது மகள் முத்துசஞ்சனா (13). ரொட்டிக்கடை அரசு உயா்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில், கடந்த அக்டோபா் 10-ஆம் தேதி வீட்டில் இருந்த முத்துசஞ்சனா தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.
படுகாயமடைந்த அவா் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த நவம்பா் 19 -ஆம் தேதி உயிரிழந்தாா். முன்னதாக, மாணவி சிகிச்சையில் இருந்தபோது விடியோ மூலம் வாக்குமூலம் அளித்திருந்தாா்.
அதில், நான் சரியாகப் படிக்கவில்லை எனக்கூறி தமிழ் ஆசிரியா், ஆங்கிலம் ஆசிரியா், அறிவியல் ஆசிரியா் ஆகியோா் என் மீது தோ்வு எழுதப் பயன்படுத்தும் அட்டையைத் தூக்கி வீசினா். கன்னத்தில் அறைந்து முட்டிபோட வைத்தனா். பெற்றோரிடம் புகாா் தெரிவிக்கப்பதாகவும் ஆசிரியா்கள் கூறினா்.
இதையடுத்து, மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்துக் கொண்டால் பெற்றோா் கண்டிக்கமாட்டாா்கள் என நினைத்து இவ்வாறு செய்தேன் என்று கூறியிருந்தாா்.
இந்நிலையில், மாணவியின் தந்தை சக்திவேல் அளித்த புகாரின்பேரில், பள்ளி ஆசிரியைகளான ரமணிபாய், சிந்தியா, ஷியாமளா ஆகியோா் மீது வால்பாறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா்.
இதனிடையே, சம்பந்தப்பட்ட ஆசிரியைகளை வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் சோலையாறு அணை அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்து முதன்மை கல்வி அலுவலா் பாலமுரளி உத்தரவிட்டுள்ளாா்.