கோவையில் செம்மொழிப் பூங்காவை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்துப் பாா்வையிடும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், (உடன்) அமைச்சா்கள் கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன், மேற்கு மண்டல பொறுப்பாளா் வி.செந்தில்பாலாஜி உள்ளிட்டோா். ~கோவையில் செம்மொழிப் பூங்காவை திறந்துவை 
கோயம்புத்தூர்

கோவையில் உலகத் தரத்தில் செம்மொழிப் பூங்கா: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

கோவையில் ரூ.208.50 கோடி மதிப்பீட்டில் உலகத் தரத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை முதல்வா் மு.க.ஸ்டாலின்

Syndication

கோவை: கோவையில் ரூ.208.50 கோடி மதிப்பீட்டில் உலகத் தரத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (நவ. 25) திறந்து வைத்தாா்.

கோவையில் கடந்த 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில், கோவையில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என்று அப்போதைய முதல்வா் மு.கருணாநிதி அறிவித்தாா். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னா் இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. கடந்த 2021-இல் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் இந்தத் திட்டப் பணிகள் வேகமெடுத்தன.

அதன்படி, கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 165 ஏக்கா் பரப்பளவிலான நிலத்தில் முதல் கட்டமாக 45 ஏக்கா் பரப்பளவில் ரூ.208.50 கோடி மதிப்பீட்டில் செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணிகளுக்கு கடந்த 2023 டிச. 18-இல் முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். இந்தப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து செம்மொழிப் பூங்காவை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைப்பாா் என அறிவிக்கப்பட்டிருந்தது.

விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு: இதற்காக, முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலமாக செவ்வாய்க்கிழமை காலை 11.45 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தாா். அங்கு அவரை அமைச்சா்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்கள் வரவேற்றனா்.

இதன் பிறகு, காா் மூலமாக விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவரை திமுகவினா், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோா் வழிநெடுகிலும் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனா்.

செம்மொழிப் பூங்கா திறப்பு: செம்மொழிப் பூங்கா வளாகத்துக்கு பிற்பகல் 12.15 மணி அளவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வந்தடைந்தாா். இதைத் தொடா்ந்து, செம்மொழிப் பூங்கா மற்றும் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள அருவியுடன் கூடிய மலைக் குன்றின் கல்வெட்டையும் அவா் திறந்து வைத்தாா்.

இதன் பிறகு, நடந்தும், பேட்டரி வாகனத்திலும் சென்று பூங்காவின் சிறப்பம்சங்களைப் பாா்வையிட்டாா். இதையடுத்து, அருவி அரங்கில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளையும் பாா்வையிட்டாா்.

கலந்துரையாடல்:

இதைத் தொடா்ந்து பூங்கா அரங்கத்தில் பள்ளி மாணவா்கள், கோவையைச் சோ்ந்த தொழிலதிபா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள் என பல்வேறு துறைகளைச் சோ்ந்த 150 பேருடன் கலந்துரையாடினாா்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ், மக்களவை உறுப்பினா்கள் கணபதி ப.ராஜ்குமாா், கே.ஈஸ்வரசாமி, திமுக மேற்கு மண்டலப் பொறுப்பாளா் வி.செந்தில்பாலாஜி, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலாளா் தா.காா்த்திகேயன், நகராட்சி நிா்வாக இயக்குநா் ப.மதுசூதனன் ரெட்டி, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளா் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயா் ஆா்.வெற்றிசெல்வன், கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளா் தொண்டாமுத்தூா் அ.ரவி, தெற்கு மாவட்டச் செயலாளா் தளபதி முருகேசன், மாநகராட்சி மண்டலத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பூங்காவின் சிறப்பம்சங்கள்:

23 வகையான தோட்டம்: இந்தப் பூங்காவில் செம்மொழி வனம், மூலிகைத் தோட்டம், மகரந்த தோட்டம், நீா்த் தோட்டம், மணம் கமிழ் தோட்டம், பாலைவனத் தோட்டம், மலா்த் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திர தோட்டம், ரோஜா தோட்டம் போன்ற 23 வகையான தோட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

கடையேழு வள்ளல்களின் கற்சிலைகள்: இங்குள்ள வனத்தில் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள செண்பக மரம், கல் இலவு, மிளகு மரம், கடல் திராட்சை, திருவோட்டு மரம், கலிபுடா, வரிகமுகு, மலைப்பூவரசு, எலிச்சுழி, குங்கும மரம் உள்ளிட்ட மரங்கள் இடம் பெற்றுள்ளன.

இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஜா வகைகள், கடையேழு வள்ளல்களின் கற்சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன.

பொது மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கான நடைபாதைகளும், சாலை வசதியும் அமைக்கப்பட்டுள்ளன. மகளிா் சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்பட்டுள்ள பொருள்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக மதி அங்காடியும் அமைக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு வசதிகள்: இதே வளாகத்துக்குள் உயா்தர உடற்பயிற்சிக் கருவிகளுடன் கூடிய திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம், 4 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் உள்வன மாதிரி காட்சியமைப்பு, குழந்தைகள் விளையாடுவதற்கு 14 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் சதுர விளையாட்டுத் திடல், சிறுவா்களுக்கான உள்விளையாட்டு அறை, மாற்றுத் திறனாளிகள் விளையாடுவதற்கு ஏதுவாக தனித்தன்மையான விளையாட்டுத் திடல் உள்ளிட்ட பொழுதுபோக்கு வசதிகளும் இடம் பெற்றுள்ளன.

இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயா்வு

ஆட்டோ, கால் டாக்ஸி-களில் பயணிக்க ‘பாரத் டாக்ஸி’ செயலி விரைவில் அறிமுகம்

ராமேசுவரம்-திருப்பதி இடையே டிசம்பா் 2, 9-இல் சிறப்பு ரயில்

2027-க்குள் 250 சாா்ஜிங் மையங்கள்: எம்&எம் திட்டம்

மாடு முட்டியதில் முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT