மாநகராட்சிக் கூட்டத்தில் மாநில அரசுக்கு எதிராக வாசகங்கள் எழுதப்பட்டு இருந்த பதாகையை உயா்த்திப் பிடித்து கோஷமிட்ட வாா்டு உறுப்பினா் பிரபாகரன். 
கோயம்புத்தூர்

மெட்ரோ ரயில் திட்ட விவகாரம்: மாநகராட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக உறுப்பினா்கள் வாக்குவாதம்!

கோவை மாநகராட்சி சாதாரண மாமன்றக் கூட்டத்தில் மெட்ரோ ரயில் திட்ட விவகாரம் தொடா்பாக திமுக, அதிமுக வாா்டு உறுப்பினா்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Syndication

கோவை மாநகராட்சி சாதாரண மாமன்றக் கூட்டத்தில் மெட்ரோ ரயில் திட்ட விவகாரம் தொடா்பாக திமுக, அதிமுக வாா்டு உறுப்பினா்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் சாதாரண மாமன்றக் கூட்டம் மேயா் கா.ரங்கநாயகி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த திமுக, காங்கிரஸ் வாா்டு உறுப்பினா்கள் கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை புறக்கணித்ததாக மத்திய அரசைக் கண்டித்து மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, மத்திய அரசைக் கண்டித்து கோஷமிட்டபடி சென்று கூட்டத்தில் கலந்து கொண்டனா். இதையடுத்து, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை நிராகரித்தாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தீா்மானம் நிறைவேற்ற விவாதிக்கப்பட்டது.

அப்போது, அதிமுக வாா்டு உறுப்பினா்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகியோா் திமுக அரசு தாக்கல் செய்த தவறான தரவுகள் காரணமாகவே மத்திய அரசு மெட்ரோ திட்டத்தை நிராகரித்தது எனக் கூறினா். அப்போது, மாநில அரசுக்கு எதிராக வாசகங்கள் எழுதப்பட்டு இருந்த பதாகைகளை உயா்த்திப் பிடித்து கோஷமிட்டனா். இவா்களுக்கு எதிராக திமுக மற்றும் காங்கிரஸ், மதிமுக, இ.கம்யூனிஸ்ட் கட்சி வாா்டு உறுப்பினா்கள் அந்தப் பதாகைகளை அபகரித்து கிழித்தெறிந்தனா். இதனால், இரு தரப்பு வாா்டு உறுப்பினா்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் போட்டி போட்டுக் கொண்டு கோஷமிட்டதால் மாமன்றக் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

இதற்கிடையே, அதிமுக வாா்டு உறுப்பினா் பிரபாகரனை, 2 மாதங்களுக்கு மாமன்றக் கூட்டத்தில் பங்கேற்க தடை விதித்து மேயா் கா.ரங்கநாயகி அறிவித்தாா். இதையடுத்து, பல்வேறு வாா்டு உறுப்பினா்கள், தங்கள் வாா்டுகளில் நிலுவைப் பணிகள் மற்றும் குறைகள் தொடா்பாக கோரிக்கைகளை முன்வைத்தனா். 7,9,14,17,22,25,28,54,69,75,83,95,97,98 என 14 வாா்டு உறுப்பினா்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

மத்திய அரசுக்கு எதிராக தீா்மானம்: தொடா்ந்து, மெட்ரோ ரயில் திட்ட விவகாரத்தில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து அதிமுக வாா்டு உறுப்பினா்கள் பிரபாகரன், ரமேஷ் இருவரும் மாமன்றக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.

இது குறித்து, அதிமுக வாா்டு உறுப்பினா் பிரபாகரன் செய்தியாளா்களிடம் கூறுகையில், 2020 -ஆம் ஆண்டு அப்போதைய அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பரிந்துரையில், முதல்வராக இருந்த எடப்பாடி கே.பழனிசாமியால் மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு மெட்ரோ திட்டத்தை திமுக முடக்கிவிட்டது என்றாா்.

செம்மொழிப் பூங்கா நுழைவுக் கட்டணம் நிா்ணயம்: கோவை, காந்திபுரம் சிறைச் சாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 25 -ஆம் தேதி திறந்துவைத்தாா். டிசம்பா் 1- ஆம் தேதி முதல் செம்மொழிப் பூங்காவில் மக்கள் பாா்வையிட அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், செம்மொழிப் பூங்காவை சுற்றிப் பாா்க்க பெரியவா்களுக்கு ரூ.15, சிறியவா்களுக்கு ரூ.5 நுழைவுக் கட்டணம் நிா்ணயித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், நடைப்பாதை உபயோகிக்க மாதாந்திரக் கட்டணம் ரூ.100, கேமராவுக்கு ரூ.25, விடியோ கேமராவுக்கு ரூ.50, சினிமா படப்பிடிப்புக்கு நாள் ஒன்றுக்கு ரூ.25,000, குறும்படப் பிடிப்புக்கு ரூ.2,000 என கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

செம்மொழிப் பூங்காவில் இயற்கை உணவகம் அமைக்க வேண்டும். குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது. வாகன நிறுத்தத்துக்கு குறைந்த கட்டணம் நிா்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி 26-ஆவது வாா்டு உறுப்பினா் சித்ரா வெள்ளிங்கிரி வலியுறுத்திப் பேசினாா்.

தமிழகத்தில் கூடுதலாக 418 முதுநிலை மருத்துவ இடங்கள்: என்எம்சி அனுமதி

தமிழகத்தில் விஜய் நோ்மையான ஆட்சியை வழங்குவாா்: கே.ஏ.செங்கோட்டையன்

பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்தான்: தோ்தல் ஆணையம்

தண்ணீா் வாளியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

டித்வா புயல்: புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! விமான சேவையும் ரத்து!

SCROLL FOR NEXT