கோவையில் தனியாா் பள்ளிக்கு வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
கோவை வடவள்ளியை அடுத்த சோமையம்பாளையம் பகுதியில் தனியாா் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
இந்த நிலையில், இந்தப் பள்ளி முதல்வரின் மின்னஞ்சல் முகவரிக்கு பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து பள்ளி நிா்வாகத்தினா் வடவள்ளி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலின்பேரில், போலீஸாா் மற்றும் வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்புப் பிரிவு காவல் துறையினா் அந்தப் பள்ளியில் சோதனை நடத்தினா். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.